கம்போங் மானிஸ் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

img 20241109 wa0029

பிறை – இரயில்வே சொத்துடமை கார்ப்பரேஷன் மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் இடையே கம்போங் மானிஸ் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தம் வருகின்ற திங்கட்கிழமை கையெழுத்திடப்படும்.

இரயில்வே சொத்துடமை கார்ப்பரேஷன் மற்றும் ரிவானிஸ் வென்ச்சர்ஸ் தனியார் நிறுவனம் இடையேயும் அத்தினத்தன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இது கம்போங் மானிஸ் குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க மாநில அரசின் முன்முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.

இதனை வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு பிறை தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் தமதுரையில் தெரிவித்தார்.

பிறை தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு தாமான் சாய் லெங்ப்பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்று இந்தியர்களின் பாராம்பரிய உணவு வகைகள், கலை கலாச்சார படைப்புகளைக் கண்டு இன்பூற்றனர்.

img 20241109 wa0055

பிறை தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹ்மத் ஃபுஸி பின் ஹாஜி அப்துல் ரசாக், மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மனிதவள அமைச்சர் ஸ்திவன் சிம், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் ஃஹாமி பின் சாய்னோல், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே, திறந்த இல்ல உபசரிப்பில் சிறப்புரை வழங்கிய மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், கம்போங் மானிஸ் வீடமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படவிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பினாங்கு மக்களின் நலனுக்காக கம்போங் மானிஸை மேம்படுத்துவதில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்படுகிறது.

img 20241109 wa0053

“எனவே, கம்போங் மானிஸ் வியூக மறுவடிவமைப்புத் திட்டம் எதிர்காலத்தில் RAC மற்றும் மாநில அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பிற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த நிலத்தில் திட்டமிடப்படும் மேம்பாட்டுத் திட்டம் வணிக அம்சத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாது. இதில் போக்குவரத்து மையம், சிறு வியாபாரம், கல்வி நிறுவனங்கள் மற்றும் மிக முக்கியமாக வீட்டுவசதி போன்ற பிற கூறுகளும் உள்ளடங்கும்.

“இந்த கூறுகள் அனைத்தும் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள்தொகையின் இயக்கம் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், சிறந்த தரமான வாழ்க்கை முறையை நோக்கி வாழ்வாதாரத்தை அதிகரிக்கும்.

“எனவே, கம்போங் மானிஸில் குடிமக்களுக்கு மறு மேம்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த LPNPP இன் பங்கு முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மாநில அரசு கம்போங் மானிஸில் உள்ள 289க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண இப்பகுதியில் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த உத்தேசித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து, கம்போங் மெயின் ரோட் வீடமைப்புப் பிரச்சனைகளை விரைவில் தீர்வுக்காண முயற்சிகளை கையாள வேண்டும் என மாநில வீடமைப்பு துறையிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

இதனிடையே, ஆடல் பாடல் என இயல் இசையுடன் திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. இதனுடன் கலைநிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தது. இதனிடையே, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தீபாவளி அன்பளிப்புப் பணத்தை 2000 பேருக்கு பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு அவர்தம் துணைவியாரின் பொற்கரத்தால் வழங்கினர்.