கலிடோனியா இண்டா வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம் வரலாற்று புகழ்பெற்றது – பேராசிரியர்

Admin

ஜாவி – பினாங்கு மாநில அரசு பி40 குழுவின் சமூகநலன் பாதுகாக்கும் வகையில் கலிடோனியா தோட்ட மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் (வகை ஏ) நிறுவும் திட்டத்தை அமல்படுத்தியது.

மாநில அரசு இந்நிலத்தின் உரிமையாளராகவும் , இகோவோல்டு(Eco world) நிறுவனம் இத்திட்ட மேம்பாட்டு நிறுவனமாகவும் செயல்பட்டு இத்திட்டத்தை வழிநடத்துகிறது.

மாநில அரசுக்கு சொந்தமான ரிம14 மில்லியன் மதிக்கத்தக்க 15.106 ஏக்கர் நிலப்பரப்பில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட 272 வீடுகள் கட்டப்படும்.

இந்தத் திட்டம் இரண்டு பிரிவாக மேம்படுத்தப்படும். முதல் பிரிவில் 112 வீடுகளும் இரண்டாம் பிரிவில் 160 வீடுகளும் கட்டப்படும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தாமான் கலிடோனியா இண்டா வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

மாநில அரசு பல ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நில ஒதுக்கீடு செய்து ஊராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சு பினாங்கு வாழ் மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் அல்லது மக்கள் வீடமைப்புத் திட்டம்(பி.பி.ஆர்) மேற்கொள்ள பரிந்துரைக்கிறது. எனினும், இன்று வரை இந்த அமைச்சகம் எவ்வித திட்டங்களும் செயல்படுத்த முன் வரவில்லை என முதல்வர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மாநில அரசு எதிர்காலத்தில் கலிடோனியா இண்டா வீடமைப்புத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிறுவப்படும் என முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“கலிடோனியா தோட்ட மக்கள் சொந்த வீடு பெற வேண்டும் என்ற 40 ஆண்டுக்கால எதிர்ப்பார்ப்பு இன்று நிறைவேற்றப்படுகிறது. தற்போது இத்தோட்டத்தில் வாழும் 80 குடும்பங்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்.
இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா வரலாற்று புகழ்பெற்ற நன்னாளாகத் திகழ்கிறது,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அகம் மலர தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் துன் அப்துல் இராக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 1974 ஆம் ஆண்டு தோட்ட மக்களுக்குச் சொந்த வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற திட்டத்தை வகுத்தார். இதில் ஏறக்குறைய 50 தோட்ட மக்கள் சொந்த வீடுகள் பெற்றனர். இருப்பினும், இந்தத் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ள பிரத்தியேக சட்டத்திட்டங்கள் அமைக்கப்படாததால் இன்று அதனை சட்டப்பூர்வமாக செயல்படுத்த முடியவில்லை.

இத்தோட்டத்தில் வாழும் பொது மக்களுக்கு வீடுகள் மட்டுமின்றி இங்கு அமைந்திருக்கும்
கோவில் மற்றும் மண்டபமும் புதுப்பிக்க ப்படும் என பேராசிரியர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் அமர் பிரித்திப்பால், இகோவோல்டு நிறுவன துணை இயக்குநர் டத்தோ சுந்திரராஜு மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் அமைக்கப்படும் வீடுகள் கலிடோனியா தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பி40 பொது மக்களுக்கும் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பதிலளித்தார். பொது மக்கள் கட்டாயம் மாநில வீடமைப்புத் துறையின் கீழ் பதிவுச் செய்ய வேண்டும், என்றார்.