கலிடோனியா இண்டா வீடமைப்புத் திட்டம் வரலாற்றுப் புகழ்பெற்றது

ஜாவி – தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் விரைவில் நெருங்கி வரும் நிலையில், கலிடோனியா தோட்ட மக்களுக்கு, மாநில அரசு மாநில முதல்வர் வாரியத்தின் மூலம்
112 வீடுகள் இலவசமாக வழங்கியது.

“மாநில அரசுக்குச் சொந்தமான ரிம15 மில்லியன் மதிக்கத்தக்க 15.108 ஏக்கர் நிலப்பரப்பில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட 272 வீடுகள் கட்டப்படும்.

“மாநில அரசு இந்நிலத்தின் உரிமையாளராகவும் , இகோ வோல்டு குழும பெர்ஹாட்(Eco World Group Berhad) நிறுவனம் இத்திட்ட மேம்பாட்டு நிறுவனமாகவும் செயல்பட்டு பொது தனியார் ஒருங்கிணைப்பில் இத்திட்டத்தை வழிநடத்தப்படுகிறது,” என தாமான் கலிடோனியா இண்டா வீடமைப்புத் திட்ட முதல் பிரிவுக்கான சாவி வழங்கும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டம் இரண்டு பிரிவாக மேம்பாடுக் காண்கிறது. முதல் பிரிவில் 112 வீடுகளும் இரண்டாம் பிரிவில் 160 வீடுகளும் கட்டப்படும்.

KETUA Menteri

முன்னதாக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020 அக்டோபர்,24 அன்று நடைபெற்றது.
மேலும், இத்திட்டம் நிறைவுப்பெற சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது என
நிலம் & பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தலைமையில் தாமான் கலிடோனியா இண்டா முதல் பிரிவுக்கான வீட்டு உரிமையாளர்கள் குலுக்கல் முறையில் கடந்த செப்டம்பர், 26 நாள் வீட்டு எண் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த கொன் இயோவ், 60 வருட குத்தகை முறையில் இலவசமாக வழங்கப்படும் இந்த வீடுகளுக்கு, குடியிருப்பாளர்கள் மேலாண்மை மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு மாதந்தோறும் 50 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும், என கூறினார்.

முதல் பிரிவில் வீடுகள் பெறாதவர்கள் இரண்டாம் பிரிவு வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தோட்டத்தின் முன்னாள் குடிமக்கள் மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம், என முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந்த கலிடோனியா வீடமைப்புத் திட்டம் இத்தோட்ட மக்களுக்குக் கிடைத்த ‘தீபாவளிப் பரிசு’ என அகம் மகிழ மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

“கலிடோனியா தோட்ட மக்கள் சொந்த வீடு பெற வேண்டும் என்ற 30 ஆண்டுக்கால போராட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இன்றைய நிகழ்ச்சி வரலாற்று புகழ்பெற்ற நன்னாளாகத் திகழ்கிறது,” என்றார்.

இத்தோட்டத்தில் வாழும் பொது மக்களுக்கு வீடுகள் மட்டுமின்றி இங்கு அமைந்திருக்கும்
கோவில் மற்றும் மண்டபமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என பேராசிரியர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் எங் மொய் லாய்;
செபராங் பிறை மாநகர் கழக மேயர் (எம்.பி.எஸ்.பி), டத்தோ அசார் அர்ஷாத்; சி.எம்.ஐ துணைப் பொது மேலாளர், டத்தின் எஸ். பாரதி, ஈகோ வேர்ல்ட் குழும பெர்ஹாட் தலைமைச் செயல் அதிகாரி, டத்தோஸ்ரீ எஸ்.சுந்தராஜூ மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டார்.

“பினாங்கு மாநிலத்தில் 2022 அக்டோபர் 7, நிலவரப்படி வாங்கும் சக்திக்கு உட்பட்ட 135,545 வீடுகள் பல்வேறு கட்டுமானக் கட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

“இது கடந்த 14வது பொதுத் தேர்தலில் மாநில அரசு அளித்த வாக்குறுதியில் குறிப்பிட்ட 76,000 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் எண்ணிக்கையை விட இரண்டு மடக்கு வீடுகள் அதிகமாக நிர்மாணிக்கப்படுவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.