ஜாவி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குறிய சூன் லிப் சீ மற்றும் செபெராங் பிறை நகராண்மைக் கழக ஒத்துழைப்புடன் கலிடோனியா தோட்டத்தில் துப்புரவுப் பணியை மேற்கொண்டார். இத்துப்புரவுப் பணி ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு நடத்தப்பட்டது. ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் மாநில சுகாதார இலாகா அத்தோட்டத்தின் திடல், வீடமைப்புப் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் கொசு மருந்து(Fogging) அடிக்கப்பட்டது.
மேலும், சுற்றுப்புறங்களில் குப்பைகள் குறிப்பாக நீர் தேங்கும் பானங்களைப் போட வேண்டாம் என்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வீட்டைத் தூய்மை செய்த கலிடோனியா தோட்ட மக்கள் செபெராங் பிறை மாநகராட்சி உதவியுடன் குப்பைகளைத் தங்களின் வீடமைப்புப் பகுதியிலிருந்து அகற்றினர்.
இந்நிகழ்வில் செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் லோ ஜு-வும் கலந்து கொண்டார். இத்துப்புரவுப் பணியில் ஈடுபட்ட 40 செபெராங் பிறை நகராண்மைக் கழக ஊழியர்கள், 10 மாநில சுகாதார ஊழியர்கள் மற்றும் கலிடோனியா பொது மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மாலை சூட்டினார் ஜாவி சட்டமன்ற உறுப்பினர். அன்றைய தினத்தன்று மழைப் பெய்த போதிலும் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற கொள்கையோடு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்புரவு நடவடிக்கையின் மூலம் தூய்மை, பசுமை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்ற மாநில அரசின் கொள்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்பது மெய்பிக்கப்படுகிறது.