நிபோங் திபால் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் முதல் முறையாக 2023-ஆம் ஆண்டுக்கான அரசு தேர்வில் (எஸ்.பி.எம்) சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களை அங்கீகரித்தது.
“பினாங்கு முழுவதிலும் சிறப்பு தேர்ச்சி அதாவது 7 ‘A’ மேல் பெற்ற 159 மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
“இன்றைய நிகழ்ச்சியில் பெருநிலத்தை சேர்ந்த 23 இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் தலா ரிம500-க்கான ஊக்கத்தொகையைப் பெற்றனர், என்று இந்து அறப்பணி வாரியத் துணை தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார் .
இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், துணை நிதி அமைச்சர் லிம் உய் இங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான ஜேசன் ஹெங் மூய் லாய்; டத்தோ ஸ்ரீ சுந்தராஜு; லிம் சியூ கிம், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர்; அறப்பணி வாரிய ஆணையர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குப் பெற்றனர்.
“பினாங்கு மாநில அரசு எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. ஏனென்றால், கல்வி ஒரு சமுதாயத்தை முழுமைப்படுத்துவதோடு, ஒரு தரமான சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் ஊன்றுகோளாகத் திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“எனவே, பினாங்கு மாநில குழந்தைகள் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான கல்வியைப் பெறுவதில் எந்த பினாங்குக் குழந்தைகளும் கைவிடப்படாமல் அல்லது ஒதுக்கி வைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்து வகையான ஆதரவையும், நிதியுதவியும் வழங்குவதில் மாநில அரசு உத்வேகம் கொண்டு செயல்படுகிறது,” என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் சி-மாட் பேரங்காடியில் நடைபெற்ற எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியில் தமதுரையில் இதனைக் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்து சமூகத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நலன் திட்டங்களை ஒழுங்கமைப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்முயற்சியை சாவ் பாராட்டினார்.
தொடர்ந்து, எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஷர்வின் த/பெ மோகன் என்ற மாணவனுக்கு மேற்கல்வி தொடர உதவும் வகையில் தங்கப்பதக்கமும் மடிகணினியும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மூன்று உடன் பிறந்தவர்கள் வரிசையில் இரண்டாம் மகனான இவர் மருத்துவத் துறையில் தனது மேற்கல்வியைத் தொடர இலக்கு பூண்டுள்ளார். புக்கிட் மெர்தாஜாம் மேல்நிலைப்பள்ளி மாணவரான இவர் உறுதியான குறிக்கோளும் தொடர் விடாமுயற்சியும் தனது வெற்றிக்கான இரகசியம் என பகிர்ந்து கொண்டார்.
இன்றைய தினத்தில் புக்கிட் மெர்தாஜாம் மேல்நிலைப்பள்ளியினை சேர்ந்த 40 இந்து மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றனர்.
மேலும், சிறப்புரையாற்றிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் இந்த ஊக்கத்தொகையானது மாணவர்கள் கல்வியில் இன்னும் சிறந்து விளங்க உந்துசக்தியாக அமையும் என்ற நோக்கத்தில் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த ஆண்டிற்கு (2024) மட்டும், இதுவரை உயர்கல்வி நிறுவனங்களில் (IPT) தங்கள் மேற்படிப்பை வெற்றிகரமாகத் தொடரும் 56 பினாங்கு மாணவர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ரிம52,700 உதவித்தொகை வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.