நிபோங் திபால் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் முதல் முறையாக 2023-ஆம் ஆண்டுக்கான அரசு தேர்வில் (எஸ்.பி.எம்) சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களை அங்கீகரித்தது.
“பினாங்கு முழுவதிலும் சிறப்பு தேர்ச்சி அதாவது 7 ‘A’ மேல் பெற்ற 169 மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
“இன்றைய நிகழ்ச்சியில் தீவுப்பகுதியை சேர்ந்த 14 இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 69 மாணவர்கள் தலா ரிம500-க்கான ஊக்கத்தொகையைப் பெற்றனர், என்று இந்து அறப்பணி வாரியத் துணை தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், துணை நிதி அமைச்சர் லிம் உய் இங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான
டத்தோ ஸ்ரீ சுந்தராஜு; லிம் சியூ கிம், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர்; அறப்பணி வாரிய ஆணையர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குப் பெற்றனர்.
“பினாங்கு மாநில அரசு எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. ஏனென்றால், கல்வி ஒரு சமுதாயத்தை முழுமைப்படுத்துவதோடு, ஒரு தரமான சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் ஊன்றுகோளாகத் திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“எனவே, பினாங்கு 2030 இலக்கினை அடைய சிறந்த மனித மூலதனத்தை உருவாக்குவதில்
அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான கல்வியைப் பெறுவதில் எந்த பினாங்குக் குழந்தைகளும் கைவிடப்படாமல் அல்லது ஒதுக்கி வைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்து வகையான ஆதரவையும், நிதியுதவியும் வழங்குவதில் மாநில அரசு உத்வேகம் கொண்டு செயல்படுகிறது,” என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கொம்தார் அரங்கத்தில் நடைபெற்ற எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியில் தமதுரையில் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், தமதுரையில் சாவ் கடந்த 2023-ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களை முன்நிறுத்தி எஸ்.பி.எம் தேர்வை எழுத தவறிய 10,160 மாணவர்களை நிலைமையை எண்ணி வருந்தினார். இன்னும் வரும்காலங்களில் இம்மாதிரியான எண்ணிக்கையை குறைக்க கல்வி அமைச்சு ஆய்வுகளை மேற்கொண்டு செயல்திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.
அதே வேளையில், அண்மையில் 10 ‘A’ தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் மேற்கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்படும் என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பை சாவ் வரவேற்றார்.
பினாங்கு மாநிலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்து சமூகத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நலன் திட்டங்களை ஒழுங்கமைப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்முயற்சியை சாவ் பாராட்டினார்.
தொடர்ந்து, தீவுப்பகுதியில் எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஷய்லா ஸ்ரீ த/பெ குமரேசன் மற்றும் கவின் இராஜன் என்ற மாணவர்களுக்கு மேற்கல்வி தொடர உதவும் வகையில் தங்கப்பதக்கமும் மடிகணினியும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இன்றைய தினத்தில் கொன்வெண்ட் கிரீன்லெண்ட் இடைநிலைப்பள்ளியை மட்டும் பிரதிநிதித்து 24 இந்து மாணவர்கள் அதிகமாக இந்த ஊக்கத்தொகையைப் பெற்றனர்.
மேலும், சிறப்புரையாற்றிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் இந்த ஊக்கத்தொகையானது மாணவர்கள் கல்வியில் இன்னும் சிறந்து விளங்க உந்துசக்தியாக அமையும் என்ற நோக்கத்தில் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் வெற்றிபெற்று சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும் நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும் என இராயர் கேட்டுக் கொண்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியை அங்கீகரிக்கவும் இந்திய சமுதாயத்திற்கு உதவும் நோக்கில் துணை நிதியமைச்சர் லிம் உய் இங் ரிம25,000 மானியம் வழங்கினார். பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவிருப்பதாக உய் இங் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, 2023 ஆண்டில் மட்டும், இதுவரை உயர்கல்வி நிறுவனங்களில் (IPT) தங்கள் மேற்படிப்பை வெற்றிகரமாகத் தொடரும் 318 பினாங்கு மாணவர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ரிம400,000 கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.