கெபுன் பூங்கா – மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக கல்வி யாத்திரை மற்றும் தமிழ் சித்திரை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் ஒத்துழைப்புடன் இனிதே வழிநடத்தப்பட்டது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட கல்வி யாத்திரையுடன் தமிழ் சித்திரை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 230 மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் மற்றும் இந்து சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
“நமது மாணவர்களிடையே கல்வி முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை மேலோங்கச் செய்யவும் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
“அதோடு மாணவர்களுக்கு இறை வழிபாடு மற்றும் சமயம் பற்றிய ஆளுமையை மேம்படுத்தவும் துணைபுரிகிறது,” என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவையின் தலைவரான விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி சிறப்பாக வழிநடத்த துணைபுரிந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பினாங்கு பால தண்டாயுதபாணி ஆலயம் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஒரு மாணவனின் ஒழுக்கம், கல்வி, சமயம் மற்றும் இறை வழிபாடு வீட்டிலிருந்தே தொடங்கப்படுகிறது. எனவே, இந்து சங்கம் ஏற்று நடத்தும் நிகழ்ச்சிகளில் பெற்றோர் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், என்றார்.
எதிர்காலத்தில் மலேசிய இந்து சங்கம், பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஒத்துழைப்புடன் இணைந்து கல்வி மற்றும் சமயம் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளதாக, தர்மன் கூறினார்.
இந்தக் கல்வி யாத்திரை அன்று மாணவர்கள் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு குடம் ஏந்தி விநாயகர் பெருமான் ஆலயத்தில் இருந்து பால தண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி வேல்! வேல்! வேல் என முழக்கமிட்டுச் சென்றனர்.
அன்றைய தினத்தில் இந்து அறப்பணி வாரிய ஆணையரும் மலேசிய இந்து சங்க செபராங் ஜெயா தலைவருமான
சிவ ஸ்ரீ சிவ தினேஷ் வர்மன் குருக்கல் தலைமையில் சமய சொற்பொழிவு, கந்த சஷ்டி பாராயணம், முருகப் பெருமான மூல மந்திரம் மற்றும் சிறப்புப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
மேலும், திரு இராமன் மற்றும் திரு ஜெகதீசன் வழிகாட்டலில் பஜனையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையரான சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.