கல்வி வழி இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவோம்

Admin
img 20241125 wa0052

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) மாணவர்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது. இதன்வழி, மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது.

பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம், டிப்ளோமா மற்றும் சான்றிதழைப் படிக்கும் மொத்தம் 42 மாணவர்கள் அறப்பணி வாரியத்திலிருந்து நிதியுதவிப் பெற்றனர்.
img 20241125 wa0062(1)

இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இந்து அறப்பணி வாரியம் நிதியுதவி அளித்து அவர்கள் எதிர்காலத்தில் வெற்றிப்பெற்ற நபர்களாக உருவாகுவதற்கு அறப்பணி வாரியம் ஊன்றுகோளாகத் திகழும் என அதன் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
img 20241125 wa0058

“கல்வி எப்பொழுதும் எங்கள் முன்னுரிமையாகத் திகழும், ஏனெனில் அது ஒரு தனிநபரிடமிருந்து ஒருபோதும் பறிக்கப்பட முடியாத ஒரு சொத்தாகும்.

“இன்றைய நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் ரிம41,500 நிதி வழங்கப்பட்டது. இது அவர்களின் கல்வித் தேவைகளை ஆதரிக்கிறது.

“எங்கள் இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், கல்வி மூலம் அவர்களை மேம்படுத்துவதற்கும் நாங்கள் உறுதி கொள்கிறோம்.
img 20241125 wa0060
“ஏனென்றால், உலகை மாற்றுவதற்கு கல்வியே மிகவும் சக்தி வாய்ந்த கருவியாகும்,” என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கொம்தாரில் நடந்த இந்து அறப்பணி வாரிய ஏற்பாட்டில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார்.

இந்து அறப்பணி வாரியம் பல உயர்கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்திய மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்க இணக்கம் கொண்டுள்ளது என்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் பகிர்ந்து கொண்டார்.

‘Twintech International University College of Technology’, மாசா பல்கலைக்கழகம்,
பெனின்சுலா கல்லூரி, பைனரி பல்கலைக்கழகம் மற்றும் எம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவை உபகாரச்சம்பளம் வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகும்.

“இந்த ஐந்து பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட 60 உபகாரச்சம்பளம் திட்டத்தின் கீழ் நான்கு மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். ஒருவேளை பிற மாணவர்கள் இத்திட்டம் குறித்து அறியாமல் இருக்கலாம்.

“எதிர்காலத்தில், அதிகமான மாணவர்கள் முன்னேறி, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி உபகாரச்ச்மபளம் பெறுவார்கள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், டாக்டர் லிங்கேஸ்வரன் இந்து அறப்பணி வாரிய ஆணையராகப் பதவியேற்ற முதல் தவணையிலே சுமார் 600 மாணவர்களுக்கு ரிம500,000 கூடுதலான கல்வி நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் லிங்கேஸ்வரனின் கூற்றுப்படி, கடந்த மூன்று மாதங்களில், இந்து அறப்பணி வாரியம் 177 இந்திய மாணவர்களுக்கு ரிம155,000 நிதியுதவி வழங்கியது.