பிறை – மலேசியாவில் பல தசாப்தங்களாகக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால் தொழில்துறை தரப்பின் தொடர்ச்சியான முயற்சிகளால், இந்த நீண்டகால பிரச்சனைக்குத் தீர்வுக் காண முடியும் என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் கூறினார்.
அண்மையில் மறுசுழற்சி முன்முயற்சி திட்டங்கள் அதிகரித்துள்ள போதிலும், மலேசியா 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கழிவுகளை உற்பத்தி செய்து வருகிறது.
இன்று முதலமைச்சர் சாவ், ஷான் பூர்ணம் மெட்டல்ஸ் தொழிற்சாலைக்கு வருகையளித்தார். அங்கு அவர் தொழிற்சாலை திடக்கழிவு மேலாண்மையில் அவர்களின் விரிவான பங்கை நன்கு புரிந்துகொள்வதற்காக அங்குள்ள முக்கிய செயல்பாட்டு தளங்களுக்குச் சுற்றுலா மேற்கொண்டார்.
“ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை பற்றிய மாநில அரசின் கொள்கைக்கு ஷான் பூர்ணம் ஒரு பங்காளியாக திகழ்கின்றது.
“இந்த தொழிற்சாலை மின்-கழிவுகளை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சாலை கழிவு குறியீடுகளையும் நிர்வகிக்கிறது.
“சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான சக்தி வாய்ந்த அர்ப்பணிப்பை இந்த தொழிற்சாலை வெளிப்படுத்துகிறது. மேலும் பினாங்கில் இதுபோன்ற ஒரு தொழிற்சாலை செயல்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
“2005 ஆம் ஆண்டில், மலேசியா ஒரு நாளைக்கு 19,000 டன் கழிவுகளை மட்டுமே உற்பத்தி செய்தது, ஆனால், 2018 இல் அது 38,000 டன் ஆக அதிகரித்துள்ளது.
“இந்தப் புள்ளிவிவரங்கள் மறுசுழற்சி முயற்சிகள் 2005 இல் ஐந்து சதவீதத்திலிருந்து 2018 இல் 17.5 சதவீதமாக உயர்ந்திருப்பதை சித்தரிக்கின்றன.
“இருப்பினும் 2023 இல், மலேசியா 35.38 சதவீதம் மறுசுழற்சி விகிதம் இருந்தபோதிலும், ஒரு நாளைக்கு சுமார் 39,000 டன் கழிவுகளை உற்பத்தி செய்து வருகின்றது.
“இவ்வாறு, 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மறுசுழற்சி விகிதத்தை (NRR) 40 சதவீதத்தை அடைவதற்கு ஏற்ப, பினாங்கு பல முன்முயற்சி திட்டங்கள் செயல்படுத்தி வழிநடத்த வேண்டும் குறிப்பாக அனைவருக்கும் பசுமையான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஷான் பூர்ணம் போன்ற நிறுவனங்களுடன் ஒன்றினைந்து இதனை சாதிக்க முடியும்.
“பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு இணையாக, மாநில அரசு கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சியில் கவனம் செலுத்தியுள்ளது.
“பினாங்கு வாழ் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வீடுகள், கடைகள் மற்றும் தெருக்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என நம்புகிறோம்.
“இதைச் சாதிக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் எங்களின் மறுசுழற்சி விகிதத்தினை 70 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். மேலும் கழிவுகளை அகற்றும் இடங்களுக்கு உற்பத்தி செய்வதைக் குறைக்க ‘மூலத்தில் கழிவுப் பிரிப்பு’ கொள்கையை அமல்படுத்தியுள்ளோம்.
“அதே நேரத்தில், எங்களது இலக்குகளை அடைவதற்கு தனியார் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி தொழில்துறை ஆகியவற்றுடன் எங்களது ஈடுபாட்டை அதிகரித்துள்ளோம். எனவே, இந்தத் துறையில் ஷான் பூர்ணத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்,” என்று பிறை, ஷான் பூர்ணம் தலைமையக அலுவலகத்தில் ஆற்றிய உரையில் சாவ் இதனைக் கூறினார்.
இந்த விழாவில், முக்கிய பங்குதாரர்கள், தொழில்துறையினர் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்றனர். இதில் சமீபத்தில் மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் குடியிருப்பு (CLQ) அடிக்கல் நாட்டும் விழாவும் இடம்பெற்றது.
ஷான் பூர்ணம் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ எஸ். செல்வகுமார் செட்டி கூறுகையில், பத்து காவானுக்கு அடுத்ததாக பிரதான இடத்தில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு, வசதியான மற்றும் தரமான தங்குமிடத்தை தொழிலாளர்களுக்கு வழங்கும், என்றார்.
அதனை விடுத்து, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வருவதால் பினாங்கில் தற்போதைய அல்லது வரவிருக்கும் முதலீடுகள் பாதிக்கப்படுமா என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சாவ், டிரம்ப் வெற்றிப் பெற்றாலும் தொழில்துறையினர் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும், தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“அமெரிக்காவுடன் மூலோபாய கூட்டமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருப்போம்,” என்று சாவ் மேலும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு தலைவர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.