ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில பதிவு பெற்ற இந்திய இயக்கங்கள் ஒருங்கிணைப்புப் பேரவை (காப்பின்) மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு இன்று மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் அப்பேரவையின் தலைவர் திரு அ. சந்திரன், செயலாளர் டாக்டர் ஷங்கர் மற்றும் பொருளாளர் திரு சு.பாலகுரு கலந்து கொண்டனர்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் வருங்காலங்களில் மாநில அரசுடன் இணைந்து இப்பேரவை பல திட்டங்கள் செயல்படுத்த வரவேற்பதாக கூறினார்.
தற்போது கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் அரசு சாரா இயக்கங்கள் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் மட்டுமே ஏற்று நடத்த தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2015-ஆம் ஆண்டு துவக்க விழா கண்ட இந்தப் பேரவையில் தற்போது 20 பதிவு பெற்ற இயக்கங்கள் இடம்பெறுவதாக அதன் தலைவர்
திரு சந்திரன் தெரிவித்தார்.
இம்மாநிலத்தில் இயங்கும் பதிவு பெற்ற இயக்கங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் செயல்படுவதற்கு காப்பின் பேரவை அடித்தளமாகத் திகழ்கிறது.
இந்தப் பேரவையின் வழிகாட்டலில் சமூகநலன், சமூக மேம்பாடு, கல்வி ஊக்கத்தொகை, மதம் மற்றும் ஆன்மீகம், கலை, விளையாட்டு, வியாபார பட்டறை என இந்தியர்களின் மேம்பாட்டுக்காக பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நடத்துவதாகவும் கூறினார்.