பிறை – அண்மையில் பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக பெண்களுக்கான புட்சால் காற்பந்து போட்டி இனிதே நடைபெற்றது.
“தற்போது காற்பந்து போட்டியில் பெண்களும் பல சாகசங்களைப் படைக்கும் வேளையில் தேசிய மற்றும் மாநில அளவிலும் இந்திய பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பினாங்கு இந்திய காற்பந்து சங்கம் முதல் முயற்சியாக பெண்களுக்கான புட்சால் போட்டி ஏற்பாடுச் செய்தது,” என பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீசங்கர் வரவேற்புரையில் இவ்வாறு தெரிவித்தார்.
அமோகமான வரவேற்பைத் தொடர்ந்து இனி வரும் ஆண்டுகளிலும் பெண்களுக்கான புட்சால் போட்டி நடத்தி அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கி தேசிய ரீதியிலான விளையாட்டு வீராங்கனையாக உருவாக்க இலக்கு கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இச்சங்கத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டு ஆறு பிரிவுகள் உள்ளடக்கிய காற்பந்து போட்டிகளும் இரு காற்பந்து பயிற்சிக்கான பட்டறைகளும் நடத்தப்படுகிறது.
செபராங் பிறை புட்சால் அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியை செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் 8 குழுக்களைப் பிரதிநிதித்து 40 பெண்கள் விளையாடினர்.’லீக்’ பாணியில் நடந்த இப்போட்டியில் வெற்றிப் பெற்ற இரு குழுக்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வுப்பெற்றன. பின்னர் ஆட்டங்கள் அனைத்தும் ‘நாக் அவுட்’ முறையில் நடைபெற்று இறுதியில் கேர்ல்ஸ் பவர் ஒ.சி குழுவினர் வெற்றி மகுடத்தைச் சூடினர். இரண்டாவது நிலையில் பினாங்கு இந்தியர் பெண்கள் குழு வெற்றி பெற்றனர்.