காற்று மாசுபாட்டிற்கான காரணத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை சுந்தராஜு

Admin
f012ae94 9b14 4e1f 92f9 649197211b51

பிறை – பினாங்கு சுற்றுச்சூழல் துறை (JAS) பிறை தொழில்துறை மண்டலம் 1க்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீர் ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டது.

 

வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோஸ்ரீ எஸ்.சுந்தராஜூ கூறுகையில், கடந்த வாரம் முதல் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களிடம் இருந்து இரும்புத் தனிமங்கள் இருப்பதாகக் கூறப்படும் காற்று மாசுபாடு குறித்து பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

 

“மாநில சுற்றுச்சூழல் துறை கட்டாய ஆய்வு நடத்தாத வரை நாங்கள் (மாநில அரசு) தொழிற்சாலையைக் குறை கூற முடியாது.

 

“காற்று மாசுபாட்டிற்கான காரணத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை, ஆனால் தூசியில் காந்தமாக்கக்கூடிய இரும்பு உள்ளடக்கம் இருப்பதால், அது இரும்புத் தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கக்கூடும் என நாங்கள் கருதுகிறோம்.

 

“இது இங்குள்ள மூலத்திலிருந்து (இரும்புத் தொழிற்சாலை) இல்லையென்றால், நாங்கள் அங்கு செல்வோம் (இந்த மாசுபட்ட காற்றுப் பகுதியிலிருந்து மேலும் தொலைவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை)” என்று அவர் இங்கு ஒரு தொடர்புடைய செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.

 

 

பிறை மாநில சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, சம்மந்தப்பட்ட இரும்புத் தொழிற்சாலையின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியை நேரில் சந்தித்து, கட்டாய ஆய்வு மேற்கொள்ள ஒத்துழைப்பைக் கோரியதாகத் தெரிவித்தார்.

 

இதனிடையே, சம்பந்தப்பட்ட இரும்புத் தொழிற்சாலையை, மாநில சுற்றுச்சூழல் துறை கட்டாய விசாரணைக்கு உதவ, மூன்று மாதங்களுக்குள் அது தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பினாங்கு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் நோராசிசி ஆதினன், பினாங்கின் காற்று மாசுக் குறியீடு (API) தற்போது 60 முதல் 80 வரை உள்ளது, இங்குள்ள மூடுபனி காரணியும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

 

“பொதுவாக API 70-ஆக கணக்கிடப்படும்; மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி, கடலில் இருந்து நிலத்தை நோக்கி காற்று வீசுவதால், குடியிருப்பு பகுதிகளிலும் பாதிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

 

முன்னதாக, கடந்த வாரம் முதல், உள்ளூர்வாசிகளிடமிருந்து காற்று மாசுபாடு குறித்து அவருக்கு குறுஞ்செய்தி வாயிலாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், ஆனால் எவ்வித எழுத்துப்பூர்வ அறிக்கை  கிடைக்கப்படவில்லை என்றும் சுந்தராஜு கூறினார்.