நம் நாட்டில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் அனைவரும் தத்தம் குடும்பத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இதனால், ஒரு சில குடும்பத்தினர் தத்தம் குடும்பத்தோடு ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் நேரத்தை கழிக்கும் வேளையில் ஒரு சில குடும்பங்களில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை தலைதூக்கி உள்ளது. இதன் தொடர்பாக முத்துச் செய்திகள் நாளிதழ் சிநேகம் சமூகநல அமைப்பினை தொடர்புக் கொண்டு நேர்க்காணல் மேற்கொண்டனர்.
சிநேகம் சமூகநல அமைப்பு 2018-ஆம் ஆண்டு பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு தலைமையில் துவக்கப்பட்டு மன நல அல்லது உணர்ச்சிப்பூர்வமான வன்முறைக்கு ஆட்கொள்ளப்படுபவர்களை பாதுகாக்கும் ஓர் அரசு சாரா இயக்கமாகும். மனச்சோர்வடைந்தவர்கள், தனிமையானவர்கள், தற்கொலை செய்துகொள்பவர்கள் அல்லது தனிப்பட்ட நெருக்கடியில் பாதிக்கும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வழங்குவதோடு இது ஒரு தற்கொலை தடுப்பு அமைப்பாகவும் கடமையாற்றி வருவது பாராட்டக்குரியதாகும்.
மேலும், இந்நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது 33% பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு ஆறுதலுக்காக இந்த சிநேகம் அமைப்பிற்கு ஆறுதலை நாடியுள்ளனர் என அதன் தலைவரான டத்தோ டாக்டர் ஃப்லொரன்ஸ் மனோரஞ்சிதம் சின்னையா குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில அரசு அண்மையில் அறிவித்த ‘பினாங்கு மக்கள் உதவித் திட்டம் 2.0’-ல் குடும்ப வன்முறையை எதிர்க்கும் அரசு சாரா இயக்கங்களுக்கு ரிம 100,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதன் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது டத்தோ டாக்டர் ஃப்லொரன்ஸ் இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும், உதாரணமாக அவசரக்கால தங்குமிடங்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்க பயன்படுத்தப்படும் என்றார். இப்பிரச்சனையை ஆராய்ந்து அதற்காக நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ள மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து, பெண்கள், குடும்பம், பாலின சமத்துவ மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத அலுவல்களின் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் தலைமையில் குடும்ப வன்முறை தொடர்பாகச் சிறப்பு பணிக்குழு அமைக்கப்படவுள்ளதை டத்தோ டாக்டர் ஃப்லொரன்ஸ் குறிப்பிட்டார்.
இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பெண்களுக்கு வீட்டில் வேலை பழு கூடியுள்ளது. அதோடு, ஒரு சிலர் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், நேர பற்றக்குறையாளும் அதிகமான பணிச்சுமையின் காரணத்தாலும் அதிகமான உணர்ச்சிப்பூர்வமான குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிநேகம் சமூகநல அமைப்பினை தொடர்புக் கொண்டு ஆறுதல் நாடியுள்ளனர்.
சிநேகம் சமூகநல அமைப்பு தனிப்பட்ட நெருக்கடியால் (மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்) பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழில் மட்டுமல்லாமல், மலாய் மற்றும் ஆங்கில மொழியிலும் கட்டணமில்லா (முற்றிலும் இலவசம்) சேவையை வழங்குகின்றது.
குடும்ப வன்முறையால் இன்னும் அதிகமான பெண்கள் பயந்துகொண்டு வெளியில் வர மறுக்கின்றனர். பெண்கள் துணிந்து தைரியமாக அனைத்தையும் சமாளிக்கும் சாத்தியத்துடன் இருப்பது மிக அவசியம், என்றார்.
ஆகவே, வன்முறைக்கு ஆட்கொள்ளப்படும் பெண்கள் தினமும் 1800 22 5757 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம். இந்த அமைப்பு பிரத்தியேகமாக இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது 24 மணி நேரம் சேவையை வழங்குவது பாராட்டக்குரியதாகும்.
தொடர்ந்து பாதிக்கப்படும் பெண்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திலும் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இம்மாதிரியான குடும்ப வன்முறைக்கு ஆட்கொள்ளப்படுவதை யாரேனும் கண்டறிந்தால் புகார் அளிக்க முன்வர வேண்டும் எனவும் சிநேகம் சமூகநல இயக்கம் கேட்டுக் கொள்கிறது.