குறைந்த விலை மற்றும் நடுத்தர குறைந்த விலை வீடுகள் “மலிவு விலை வீடுகளாக” பெயர் மாற்றம் காணவிருப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ. அண்மையில் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ அலிமா பிந்தி முகமாட் சாடிக் உடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். இத்திட்டம் தேசிய அளவில் ‘Garis Panduan Pelaksanaan Harga Kos Rendah (Pindaan) 2002’ எனும் கொள்கையின் கீழ் ஏற்கனவே அமலில் இருப்பதாகவும் இத்திட்டத்தை வாராந்திர ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதித்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வழங்குவதாக மேலும் விவரித்தார் திரு.ஜெக்டிப்.
இவ்வருடத்திலிருந்து குறைந்த விலை மற்றும் நடுத்தர குறைந்த விலை வீடுகள் அனைத்தும் மலிவு விலை வீடு வகை A, B, C,… என அடையாளம் காணப்படும். கீழ்க்காணும் அட்டவணை மலிவு விலை வீடுகளின் வகை மற்றும் விற்கும் விலையை சித்தரிக்கின்றது.இதனிடையே, PN 1 எனும் வீட்டு விண்ணப்பப் பாரத்தின் கூறுகளும் மறுப்பரிசீலனை செய்யப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது பாரத்தை கவனமுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப்.}