பிறை – அண்மையில் கொம்பஸ் லாய்ட் சங்க (கிளாஸ்) ஏற்பாட்டிலும் வெர்ன் குழந்தைகள் பராமரிப்பு மைய இணை ஆதரவிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால்(பி.கே.பி) பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களுக்கானப் பரிசுக்கூடை வழங்கப்பட்டன. மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி வெர்ன் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டதோடு பொது மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.
“பல்லின சமூகத்தைச் சேர்ந்த 52 குடும்பங்களுக்கு இந்த அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. பி.கே.பி ஆணையால் பாதிக்கப்பட்டோர்; பி-40 குழுவினர் மற்றும் நோன்புப் பெருநாள் கொண்டாடும் முஸ்லிம் சமூகத்தினர் என பிறை, செபராங் பிறை, பெர்மாத்தாங் பாவ் மற்றும் பட்டர்வொர்த் வட்டாரத்தைச் சேர்ந்த பொது மக்கள் இந்நிகழ்ச்சியில் பரிசுக்கூடை பெற்றுக்கொண்டனர்.
“2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளாஸ் சங்க ஏற்பாட்டில் மகளிர் மேம்பாடு, சிறார் உடல் பாதுகாப்பு கல்வி, மாணவர் தலைமைத்துவப் பட்டறை, சமூக திறன் மேம்பாடு போன்ற பல திட்டங்கள் நடத்தப்படுகின்றன,” என அதன் தலைவரும் தொற்றுனருமான தி.சதீசன் திருமோகன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இச்சங்கத்தின் ஆலோசகர் ரவிச்சந்தர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
“தற்போது கோவிட்-19 தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் சுகாதார அமைச்சு குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்படுவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மையங்களில் பொதுவாகவே சிறு குழந்தைகள் அனுப்பப்படுவதால் அதன் பரவலின் தாக்கமும் அதிகமாக இருக்கும். எனவே, சுகாதார அமைச்சின் அனுமதி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக செயல்முறையின் (எஸ்.ஓ.பி) வழிக்காட்டலுக்குக் காத்திருக்க வேண்டும்,” என இந்நிகழ்ச்சிக்குப் பின் வெர்ன் குழந்தை பராமரிப்பு மையத்தைப் பார்வையிட்ட பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார்.
இரண்டாம் துணை முதல்வர் இந்த கிளாஸ் சங்கத்தின் சமூகநலத் திட்டங்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.