பெர்தாம் – மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ அஹ்மத் ஜக்கியுதீன் அப்துல் ரஹ்மான் கெபாலா பத்தாஸ் பொது மருத்துவமனையின் வசதியை மேம்படுத்த கொள்கலன்களை நன்கொடையாக வழங்கினார். இந்த கொள்கலன்கள் மருத்துவமனையின் பசுமை மண்டல ஆபத்து மற்றும் அவசர பிரிவுவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும்.
கூட்டரசு அரசாங்கம் பொது சுகாதாரத் துறையின் வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக பினாங்கு மாநிலம் உட்பட நாடளவிய நிலையில் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் அதிகரிக்கும் வேளையில் சுகாதாரத் துறை ஒதுக்கீடுகளையும் அதிகரிப்பது அவசியம் என்று இஸ்லாமிய மத விவகாரங்கள், கூட்டுறவு மற்றும் சமூக மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினருமான அகமது ஜக்கியுதீன் கூறினார்.
“தரமான பொது சுகாதாரத் துறை சேவைகளை வழங்குவது கூட்டரசு அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை மாநில அரசு அறியும்.
எனவே, மாநில அரசு நிதி பிரச்சனை எதிர்நோக்கிய போதிலும், இந்த மருத்துவமனையின் பச்சை மண்டல செயல்பாட்டுக்கு கொள்கலன்கள் பங்களிப்பு பினாங்கில் பொது சுகாதார சேவைத் துறையின் தரத்தை மேலும் மேம்படுத்தும்,” என பினாங்கு துங்கால் சட்டமன்ற உறுப்பினருமான அஹ்மத் ஜக்கியுதீன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
முன்னதாக, கெபாலா பத்தாஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நோர்ஹசிமாவத்தி அப்துல் முத்தலிப் இந்த மருத்துவமனையின் பச்சை மண்டலத்தில் கூடுதல் வசதிகளை வழங்குவதற்கு ரிம27,500 நிதி ஒதுக்கீடு வழங்கிய முதலாம் துணை முதல்வருக்கு தனது பாராட்டினை தெரிவித்தார்.
மேலும், கெபாலா பத்தாஸ் மருத்துவமனை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ‘கோவிட் -19 மருத்துவமனையாக’ பயன்படுத்தப்படுகிறது.
அங்கு மகப்பேறு வார்டுகள் உட்பட அனைத்து வார்டுகளும் கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன
“இருப்பினும், கெபாலா பத்தாஸ் மருத்துவமனை ‘கோவிட் -19 மருத்துவமனையாக’ அங்கீகரிக்கப்பட்டாலும், பச்சை மண்டல ஆபத்து மற்றும் அவசர பிரிவுவில் எப்பொழுதும் போல நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்,” என விளக்கமளித்தார்.
இதற்கிடையில், கெபாலா பத்தாஸ் மருத்துவமனையின் துறைத் தலைவரும் அவசரப் பிரிவின் நிபுணருமான டாக்டர் சுஹைதா ஹனிஸ் ஜோஹாரி ஓர் அறிக்கையில், இதற்கு முன்பு அவசரப் பிரிவில் தற்காலிக கூடாரங்கள்
அமைக்கப்பட்டு நோயாளிகளின் கூடுதல் வசதிக்குப் பயன்படுத்தப்பட்டது.கடந்த மார்ச்,4 ஆம் நாள் அன்று நடந்த புயலில் இந்த கூடாரங்கள் சேதமடையும் வரை இது பயன்பாட்டில் இருந்தது, என அறிவிக்கப்பட்டது.