பினாங்கு நகராண்மைக் கழகம் கேளிக்கை மற்றும் வியாபார உரிமம் வழங்கும் அணுகுமுறையில் சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. கேளிக்கை மற்றும் வியாபார உரிமம் பெறுவதற்குப் பொது மக்கள் இடைத்தரகர் உதவியை நாடி வந்தனர். ஆனால், ஜுன் 3-ஆம் நாள் தொடங்கி இந்த உரிமம் பெறுவதற்கு அதன் உரிமையாளர் அல்லது அந்த நிறுவனத்தின் செயலாளர் மட்டுமே நகராண்மைக் கழகத்தினரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இலஞ்ச ஊழலைத்தடுக்கும் பொருட்டே இந்த செயல்திட்டம் நடைமுறைக்கு அமல்படுத்தப்படுகிறது என்றார் பினாங்கு நகராண்மைக் கழக ஆலோசகர் ஒங் ஆ தியோங். இந்த இடைத்தரகர் நகராண்மைக் கழகத்தினரிடமிருந்து உரிமம் பெற்றுத் தருவதற்கு உரிமையாளர்களிடமிருந்து அதிகமாகப் பணத்தைக் கூலியாகப் பெறுகின்றனர். இந்த இடைத்தரகர் கேளிக்கை மையங்களுக்கு உரிமம் பெற்றுத் தருவதற்கு ஏறக்குறைய ரி.ம7,000 முதல் ரி.ம 8,000 வரை இலஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றார் ஒங் ஆ தியோங்
இந்த இடைத்தரகர் நகராண்மைக் கழகம், காவல்துறை மற்றும் தீயணைப்புதுறை ஆகிய தரப்பினரிடம் இருந்து உரிமம் பெருவதற்குப் பல ஆயிரக்கணகானப் பணத்தை இலஞ்சமாக பெறுகின்றனர். ஆனால், இந்த உரிமம் விண்ணபிப்பது இலவசம் என்றும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏறக்குறைய ரி.ம120 முதல் ரி.ம360 மட்டுமே செலவிடப்படும்.
எனவே, பொது மக்கள் தைரியமாக முன்வந்து இந்த கேளிக்கை மற்றும் வியாபார உரிமம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பொது மக்களுக்கு உதவும் வகையில் நகராண்மைக் கழக ஊழியர்கள் சேவைச் செய்ய அகம் மலர காத்திருகின்றனர். பொது மக்கள் இந்த கேளிக்கை மற்றும் வியாபார உரிமம் பெறுவதற்கு இலகுவாக பினாங்கு மாநில நகராண்மைக் கழக அனுமதி தவிர காவல் துறை, தீயணைப்புதுறை ஆகியோரின் அனுமதி பெற தேவையில்லை. மேலும், முறையாக விண்ணப்பிக்கும் தரப்பினருக்கு 24 மணி நேர உரிமம் வழங்குதல் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டு மின் விண்ணப்பம் கூடிய விரைவில் பினாங்கு வாழ் மக்களின் நன்மை கருதி அமல்படுத்தப்படும் என்பது சாலச்சிறந்தது.