பிறை – பிறை எம்.பி.கே.கே மற்றும் பினாங்கு இந்தியர் காற்பந்து கழகத்தின் ஏற்பாட்டில் கே.ரகு காற்பந்து கோப்பை 2024 (பெண்களுக்கான காற்பந்து போட்டி), அதிகாரப்பூர்வ துவக்கம் கண்டது.
“பிறை சமூகத்திற்கு ரகுநாதன் @ தனபால் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டுவதற்கும் அங்கீகரிப்பதற்காகவும் இந்தப் போட்டி அர்ப்பணிக்கப்படுகின்றது”, என பினாங்கு இந்தியர் காற்பந்து கழகத் துணை தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
கே.ரகு கடந்த 15 ஆண்டுகளாக ஐ.செ.க கட்சி மற்றும் பிறை எம்.பி.கே.கே-வின் சிறந்த உறுப்பினராக சேவையாற்றி வருகின்றார்.
தாமான் இண்ராவாசே திடலில் நடைபெற்ற கே.ரகு காற்பந்து போட்டியின் கோப்பை அறிமுக விழாவினை எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை துவக்கி வைத்தார்.
மூன்று மாதங்களுக்கு நடைப்பெறும் இப்போட்டியில் U13 பெண்கள் ஆறு அணிகளாக களமிறங்குவர். போட்டியாளர்கள் அனைவரும் பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி வருகின்ற 4 ஆகஸ்ட் 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பினாங்கு இந்தியர் காற்பந்து பயிற்சியாளர்கள் இப்போட்டியை ஏற்பாடு செய்து வழிநடத்துவர்.
இந்த போட்டியை வெற்றியடைய உறுதுணையாக இருந்த பிறை எம்.பி.கே.கே உறுப்பினர்கள், JPWK மற்றும் JBPP உறுப்பினர்கள் மற்றும் பிறை சட்டமன்ற அலுவலகத்திற்கு ஸ்ரீ நன்றியை நவிழ்ந்தார்.
“மேலும், கே.ரகு காற்பந்து போட்டியின் முடிவில், 2024 டிசம்பரில் பேங்காக்கில் நடைபெறவிருக்கும் காற்பந்து போட்டியில் பங்கேற்க சிறந்த 10 வீரர்கள் இதன்வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
“இப்போட்டி இளம் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்துலக அரங்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கும்”, என பொன்னுதுரை நம்பிக்கை தெரிவித்தார்.