தயாஷினி எனும் 5 வயது நிரம்பிய சிறுமி தனது தாயாரால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அனைவரின் மனதையும் வருடியது. அச்சிறுமி கடுமையான காயங்களுக்குள்ளாகி கண்ணீர் மல்க அழுதுக்கொண்டிருந்ததைக் கண்ட அண்டை வீட்டுப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர்களான முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு ஆகியோர் அச்சிறுமியைக் கண்டு அனுதாபம் தெரிவித்தனர்.
அச்சிறுமி செபராங் ஜெயா அரசு மருத்துவமனையின் உதவியால் முழுமையாகக் குணமடைந்தார். மேலும் அச்சிறுமியின் பராமரிப்பு உரிமத்திற்குக் குடும்ப உறுப்பினர்கள் போட்டிப் போட்ட வேளையில் மாநில சமூக நலத் துறை தாமான் பக்தி குழுந்தை காப்பகத்தில் சேர்த்தனர். அக்காப்பகத்தில் அனுப்பப்பட்ட அச்சிறுமியின் பாதுகாப்பு குறித்து மாநில சமூக நலத் துறை தொடர்ந்து 1 மாதத்திற்குக் கண்காணிக்கும் எனத் தெரிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. இக்குழந்தை இந்துவாக வளர்வதை உறுதிப்படுத்துவதோடு அதற்கான சூழலில் மட்டுமே இச்சிறுமி வளர வேண்டும் என வலியுறுத்தினார்.
குழந்தை பாதுகாப்பு பராமரிப்புக் குறித்த சட்டத் திட்டங்கள் மறுபரிசீலனைச் செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று பிறை வட்டாரத்தில் சிறார் கொடுமைக்கு ஆளாகிய தயாஷினி எனும் சிறுமியைக் காண வந்த பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பாக குறிப்பிடுகையில், பொது மக்கள் அனைவரும் அண்டை அயலார் வீட்டில் சிறார் கொடுமை ஏற்பட்டால் உடனடியாக காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் நாட்டில் அதிகரித்து வரும் சிறார் கொடுமைகளைத் தவிர்க்கலாம் என்றார்.
தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் பெண்கள் சேவை மையம், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம், ஆகிய அமைப்புகள் பெண்களின் உரிமைகள் மற்றும் பராபரிப்பு பாதுகாக்கப்படுகிறது. எனவே, வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்கும் பெண்கள் இந்த அமைப்புகளின் உதவியை நாடலாம் என்று கஸ்தூரி ராணி பட்டு கூறினார்.}