கொம்தார் தொகுதியில் சமூக மத்தியஸ்த சேவை மையம்

Admin

ஜார்ச்டவுன் – நீதிமன்ற வழக்குகள் தீர்வுக்காண சில நேரங்களில் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதோடு அதன் சேவை கட்டணமும் உயர்ந்ததாகவே இருக்கிறது.

எனவே, இந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பொருட்டும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் நோக்கத்திலும்  கொம்தார் தொகுதியின் பினாங்கு2030 மையத்தில் ஒரு சமூக மத்தியஸ்த சேவை மையம் தொடக்க விழாக் காண்கிறது.

கொம்தார் பகுதியில் மத்தியஸ்த சேவை மையத்தை அமைக்க துணைபுரிந்த பினாங்கு சமரச நீதிபதிகள் மன்றம் மற்றும் அதன் ஜே.பி மத்தியஸ்த பணியகத்திற்கு தனது நன்றியை கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் தெரிவித்தார்.

“வாதங்கள் மற்றும் தகராறுகள் நம் வாழ்வில் அடிக்கடி நிகழ்கின்றன. இரு தரப்பினரும் ஒரு தீர்வை எட்ட முடியாத சூழலில், மூன்றாம் தரப்பினரின் உதவி நாடப்படுகிறது.

“தவறான புரிதல், தவறான தகவல் பரிமாற்றம் அல்லது தகவல் பகிர்வு இல்லாமை காரணமாக இவை நிகழலாம். ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு, பொதுவாக நீதிமன்றத்திலோ அல்லது சிவில் நீதிமன்றத்திலோ கூட உரிமையைக் கோர அணுகலாம். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கக் கூடும். சில சமயங்களில் வாதத்தின் மதிப்பை விட அதிகமாக செலவாகும்.

“அதனால்தான் இரு தரப்பும் ஒரு தீர்மானத்தை அடைய உதவுவதற்கும் ஒரு சர்ச்சையை சுமூகமான முறையில் தீர்த்து வைப்பதற்கும், மத்தியஸ்தரைக் கொண்டிருப்பது நல்ல யோசனையாகும். மத்தியஸ்தம் என்பது இரு தரப்பினரையும் ஒன்றாக உட்கார வைத்து பொதுவான நிலையைக் கண்டறியவும், அவர்களின் வாதத்தைத் தீர்த்து வைப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்,” என்று கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தேய் லாய் ஹெங் தனது உரையில் கூறினார்.

32 ஆண்டுகளுக்கு முன்பு 1990 ஆம் ஆண்டு ஜே.பி மத்தியஸ்த பணியக நியமனம் நடந்தது என்றும் அவர் கூறினார். அதன் பினாங்கு ஜே.பி கவுன்சில் உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற்றவர்களாவர். இளைய ஜே.பிக்கு கூட 70 வயதுக்கு மேல் இருக்கும், என்றார்.

மேலும், தங்கள் சமூகத்திற்கு பங்களிக்கவும் உதவுவதற்கும், இளம் உள்ளூர் தலைவர்களை மத்தியஸ்தர்களாக உருவாக்கப் பயிற்சி அளிப்பதற்கும் அவர்களின் பொன்னான நேரத்தை செலவழிக்க முனைப்புக் காட்டுகின்றனர்.
மேலும், இது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகள் வழங்கவும் துணைபுரிகிறது.

“ஒரு புதிய மத்திய அரசாங்கத்துடன் ஒரு புதிய மலேசியாவை நோக்கி முன்னேறிச் செல்லும்போது, ​​ஒவ்வொருவரின் பிரச்சனைகளையும் முதிர்ச்சியுடனும் சமூகமான முறையிலும் நாம் தீர்த்து வைப்பது மிகவும் முக்கியம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“அனைத்து சர்ச்சைகளும் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டியதில்லை. சமூகத் தலைவர்கள் ஒரு நம்பகமான மூன்றாம் தரப்பினராக செயல்படக்கூடிய ஒரு மத்தியஸ்தராக செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு நடுநிலையிலான தீர்மானம் பெற இரு தரப்பினரையும் சமாதாரணம் செய்வதன் மூலம் சர்ச்சைகளுக்குத் தீர்வுக் காண முடியும்.

“இந்தச் சேவையைப் பெறுவதற்கான கூடுதல் விபரங்களுக்கு 04-2277068 என்ற எண்ணில் அழைத்து சந்திப்பை ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்வோம். உங்கள் பிரச்சனைகளைச் சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு உதவுவோம்,” என்று தேய் கூறினார்.

இந்த மையத்தின் தொடக்க விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ லிம் சோங் ஃபோங், செக்‌ஷசன் நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைமை மத்தியஸ்த மைய எம்.பி.பி.பி ஓய் ஷியோவ் யீன், ஜே.பி கவுன்சில் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம், Asian Institute of Alternative Dispute Resolution தலைவர் பேராசிரியர் டத்தோ சுந்தர ராஜூ மற்றும் ஜே.பி. பினாங்கு கவுன்சில் செயலாளர் டத்தோ ஓங் செங் ஹுவாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜே.பி சமூக மத்தியஸ்த சேவை சரியான நேரத்தில் மற்ற அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்படும் என்று லிம் நம்பிக்கை தெரிவித்தார்.