கோலாட்டத்தை எதிர்கால சந்ததியினரும் கற்றுக் கொண்டு பாரம்பரியத்தை தொடர வேண்டும்

img 20250313 wa0011

 

ஜார்ச்டவுன் – தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக ‘கோலாட்டம்’ (குச்சி நடனம்) நடனத்தைப் பாதுகாப்பதும், கௌரவிப்பதும் மட்டுமின்றி இந்தக் கலையை எதிர்கால சந்ததியினர் போற்றி பின்பற்றுவதை உறுதி செய்கிறது.

வாட்டர்ஃபால் கோலாட்டம் குழுவின் தலைவரான அமரேந்திரன்,42 கடந்த மூன்று தலைமுறைகளாக ‘கோலாட்டம்’ கலையைப் பாதுகாத்து பறைசாற்றி வருவதாகப் பகிர்ந்து கொண்டார்.

இது கோல்களைக் கையில் பிடித்து ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவோ ஒருங்கிணைந்தோ அடித்து ஆடும் ஆட்டம் கோலாட்டம் எனப்படுகிறது. இந்தக் கோலாட்டம் அலங்கரிக்கப்பட்ட கோல்களைக் கொண்டு கோலாகலமாக ஆடப்படும் ஆட்டமாகும்.

முன்னதாக, ஶ்ரீ நாகநாதர் கோலாட்டக் குழு என்று அழைக்கப்பட்ட இந்த குழு, நாராயணசாமியால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இருப்பினும், 1960-களில் இருந்து தொடங்கிய வரலாறு இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

அமரேந்திரனின் கூற்றுப்படி, அவரது குழுவில் 21 முதல் 42 வயது வரம்பிலான இளம் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசக் கொண்டாட்டத்தின் கோலாட்டம் அடிப்பது அவர்களின் மிக முக்கியமான வருடாந்திர நடவடிக்கையாக அமைகிறது.

“நாங்கள் வழக்கமாக தைப்பூசத்திற்கு இரண்டு மாதங்கள் பயிற்சி செய்வோம், எங்கள் உறுப்பினர்களில் சிலர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள். எனவே, ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தைப்பூசத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே விடுமுறை எடுத்து வந்து பயிற்சியை மேற்கொள்வர்,” என்று அவர் சமீபத்தில் முத்துச் செய்திகள் நாளிதழிக்கு அளித்த பேட்டியின் போது இவ்வாறு கூறினார்.

“அவர்களில் பெரும்பாலோர் ‘கோலாட்டம்’ நுட்பங்களை ஏற்கனவே நன்கு அறிந்து அனுபவம் பெற்ற கலைஞர்கள். எனவே, அவர்களால் குறுகிய நேரத்திலே விரைவாக வழக்கத்தை ஏற்றுக்கொண்டு கோலாட்டம் அடிக்கத் தயாராகிவிடுவார்கள்.”

13 வருடங்களாக இந்தக் குழுவை வழிநடத்திவரும் அமரேந்திரன், இளைய தலைமுறையினர் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து வழிநடத்த அக்கலையைக் கற்றுக் கொள்வது அவசியம், என்றார்.

“இக்குழுவில் தற்போது 70 உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் இந்த பாரம்பரிய கலையைக் கற்றுக்கொள்ள அதிக இளைஞர்களை ஈர்ப்பதில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.”

தற்போது மரக் குச்சிகளின் விலை, ஒவ்வொன்றும் ரிம12 என விற்கப்படுவதால் ஒரு நபருக்கு ஒரு ஜோடி தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தக் குச்சிகள் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தேய்ந்து போவதோடு, அது உடைந்து போகும் நிலை ஏற்படுவதால் நிதிச் சுமையை எதிர்நோக்குவது முக்கிய சவாலாக அமைகிறது, என்றார்.

அமரேந்திரனின் கூற்றுப்படி, தாளம் மற்றும் இசை நடனத்தை உயர்த்துவது போல, ‘கோலாட்டம்’ மேம்படுத்துவதில் இசை முக்கியப் பங்கு வகிக்கிறது.

“உருமி மேளம் (இந்திய பாரம்பரிய மேளம்) மற்றும் ‘கோலாட்டம்’ அடிக்கும் இடையே ஒத்தி அசைவு அவசியம். ஏனெனில், அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன.

“ஒரு தலைவராக, நான் இசைக்கலைஞர்களை குறிப்பிட்ட தாளங்களுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்ற சமிக்ஞை செய்ய ஒரு விசிலைப் பயன்படுத்துவேன். அந்த இடத்தில் சத்தம் அல்லது கூட்டம் அதிகமாக இருந்தால், இசைக்கலைஞர்களின் தாளத்திற்கு ஏற்ப கோலாட்டம் அடிப்பதை உறுதிசெய்ய நாங்கள் ஒரு ஹார்னைப் பயன்படுத்துவோம்.”

img 20250313 wa0009

கோலாட்ட நடனத்தில் வரி அடி (line strike) மற்றும் வட்ட அடி (circle strike) முக்கிய இரண்டு முதன்மை பிரிவுகளாகும்.

இந்த நடனக் கலையில், வரி அடி மற்றும் வட்ட அடியின் கீழ் உள்ள வடிவங்களில் ஜிக்-ஜாக், மேல்கும்மி, அனுமான், மேலே கீழே, கைக்கு இரண்டு, 4 சேர், கைக்கு நாலு, வீடு, விசிறி, வானம், அம்பு மற்றும் பாம்பு ஆகிய அடிகள் தற்போதுள்ள வழக்க சொற்களில் இடம்பெறுகிறது.

1970-களில் குழுவின் முன்னோடிகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு நுட்பமான நெருப்பு கொண்ட கோலாட்டம் அடியை பல நிகழ்ச்சிகளில் மீண்டும் அறிமுகப்படுத்தும் தனது விருப்பத்தையும் அமரேந்திரன் வெளிப்படுத்தினார்.

“மேலும், இந்தப் பாரம்பரிய நடனத்தை தொடருவதற்கு இக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு புதிய உறுப்பினரை குழுவில் சேர்க்குமாறு நான் ஊக்குவிக்கிறேன். இதன் மூலம், இந்தப் பாரம்பரியத்தை நாம் தொடர முடியும்.

இதற்கிடையில், மூத்த கோலாட்டக் கலைஞர் லட்சுமணன், இந்த கலை வடிவத்தை அரை தற்காப்புக் கலை மற்றும் நாட்டுப்புற நடனத்தின் கலவை என்றும், ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாகவும் விவரித்தார்.

“இதுப் பண்டிகைகள், கொண்டாட்டங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் போது நடத்தப்படுகிறது. இது நிகழ்ச்சியின் சாரத்தை மேலும் மெருகூட்டுகிறது.

“தமிழில், இதைப் பாரம்பரியம் என்றும் அழைக்கிறோம், அதாவது தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றப்படும் பாரம்பரியம் மற்றும் மரபுகள் ஆகும்.

“இது தற்காப்புக் கலை கூறுகளை உள்ளடக்கியது, குறிப்பிடத்தக்க சுறுசுறுப்பு, நிலைத்தன்மை மற்றும் துல்லியத்தை வெளிப்படுத்துகின்றன. இது சுய ஒழுக்கத்தையும் வளர்க்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்

img 20250313 wa0013

 

 

எதிர்காலத்தை நோக்கி, இளைஞர்களை ஊக்குவிக்கவும், கோலாட்டத்தின் மீதான ஆர்வத்தை வளர்க்கவும், தமிழ்ப்பள்ளிகளுடன் இணைந்து பயிலரங்குகளை ஏற்பாடு செய்யவும், லட்சுமணனும், அமரேந்திரனும் திட்டமிட்டுள்ளனர்