பத்து உபான் – “முன் வரிசை பணியாளர்கள் கோவிட்-19 எதிர்த்து போராடும் போர்களத்தில் பாதுகாப்புக் கூறுகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம்.
பத்து உபான் தொகுதியில் அமைந்துள்ள சுங்கை டுவா மற்றும் புக்கிட் ஜம்புல் சுகாதார கிளினிக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மின் விசிறி, தற்காலிக கூடாரம், இரண்டு சக்கர நாற்காலி வழங்கி அவர்களின் சேவையை வலுப்படுத்துவதாக,” பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தெரிவித்தார்.
மேலும், சுங்கை நிபோங் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசங்கள் மற்றும் கைத்தூய்மி வழங்கப்பட்ட நிலையில் பத்து உபான் இராணுவ முகாமிற்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டன என்றார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
மார்ச் மாதம் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பத்து உபான் தொகுதியில் இருக்கும் 80 விழுக்காடு குடியிருப்புகளுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும் , இந்த ஆணை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்ட வசதிக் குறைந்த பொது மக்கள், வருமானத்தை இழந்து தவிக்கும் சிறு தொழில் வியாரிகள் என அடையாளம் காணப்பட்டு அன்றாட சமையலுக்குத் தேவையான மளிகை பொருட்கள் 400 பொட்டலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாநில அரசு சமூக நல இயக்கம் மற்றும் சமத்துவப் பொருளாதார திட்டத்தின் கீழ் பதிவுப்பெற்றவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பத்து உபான் தொகுதியைச் சேர்ந்த 380 பெறுநர்கள் மளிகை பொருட்கள் பெற்றுக்கொண்டனர்.
தற்போது கூடுதலாக 500 மளிகை பொருட்களுக்கான பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ரமடான் மாத நோன்புப் பெருநாளை முன்னிட்டு
ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதிக்குள் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
பத்து உபான் சட்டமன்ற தொகுதியின் கீழ் இயங்கும் ஆறு கம்போங் நிர்வாக செயல்முறை குழுவினர், பத்து உபான் சேவை மைய ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பின் மூலம் இந்த கோவிட்-19 ஐ எதிர்நோக்க முடிகிறது என புகழாரம் சூட்டினார்.
“தற்போது எனது தலைமைத்துவத்தின் கீழ் எம்.பி.கே.கே உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சேவை மைய ஊழியர்கள் என புதிய புலனம் குழு உருவாக்கப்பட்டு பொது மக்களுக்கு உடனடி உதவிகள் துரிதப்படுத்துவதாக குமரேசன் கூறினார்.
பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றுவதை குறிப்பாக சமூக இடைவெளி உறுதிச்செய்ய அடிக்கடி பொதுச் சந்தைகள் மற்றும் காவல் மற்றும் இராணுவ படையின் சாலை தடுப்பு பகுதிகளுக்குச் சென்று கண்ணோட்டமிடுவதாகக் கூறினார்.
தற்போது , பினாங்கு மாநிலத்தில் சில நாட்களாக கோவிட்-19 க்கு
சுழியம் வழக்கு பதிவாகியுள்ளது. 14 நாட்களில் கூடுதல் வழக்குகள் பதிவு பெறவில்லை என்றால் பினாங்கின் அனைத்து மாவட்டங்களும் பச்சை நிற மண்டலமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 27-ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
எனவே, பொது மக்கள் மெத்தன போக்குடன் இருக்காமல் நீண்ட காலக்கட்டத்திற்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார கூறுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.