ஜார்ச்டவுன் – கோவிட்-19 நுண்ணுயிர் தொற்று வைரஸால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் மாநில அரசு தொடக்கத்தில் அறிவித்த தொகையை விட கூடுதலாக ரிம55 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநில அரசு மூன்று முக்கிய நோக்கங்களுக்காக மொத்தமாக ரிம75 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதை இன்று கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் இதனை மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அதிகாரப்பூர்வ அறிவிப்புச் செய்தார்.
மேலும் அவர் கூறுகையில், வணிகர்கள், சிறு வர்த்தகர்கள், வாடகைக்கார் ஓட்டுநர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், இ-ஹெயிலிங் ஓட்டுநர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பி40 குழுவினர் ஆகியோருக்கு உடனடி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதை விவரித்தார்.
மாநில அரசு பொது மக்கள் மற்றும் மாநிலத்திற்கும் குறைந்த தாக்கத்தை உறுதிச் செய்வதற்காக மனித வளங்கள், தளவாடங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டமிட்டு இந்த சூழ்நிலையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது. எனவே, இந்த சவாலை எதிர்கொண்டு நாம் அனைவரும் அமைதியாகவும், பொறுமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என மாநில முதல்வர் வலியுறுத்தினார்.
மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் நில வரி கட்டணத்தைத் தற்காலிமாக நிறுத்தி வைத்தல்; முன்வரிசை பணியாளர்களுக்கு உதவுதல்; உரிமம் பெற்ற சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் என நன்மைப்பெறும் வகையில் 16 ஊக்கத்தொகை திட்டங்கள் அறிவித்தார்.
16 ஊக்கத்தொகை திட்டங்கள் பின்வருமாறு:
1. இரண்டு ஊராட்சி மன்றங்கள் (எம்.பி.பி.பி & எம்.பி.எஸ்.பி) பதிவுப்பெற்ற சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் என 14,012 பேர்களுக்கு ரிம500-ஐ ஊக்கத்தொகையாகப் பெறுவர். வருகின்ற 15 ஏப்ரல் தொடங்கி விண்ணப்பிக்கலாம்.
2.சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சில் பதிவுப்பெற்ற 1,367 சுற்றுலா ஓட்டுநர்களுக்கு ரிம500 ரொக்கம் உதவித்தொகை.
3.ஊனமுற்றோர் மற்றும் சமத்துவ பொருளாதார திட்டப் (AES) பெறுநர்கள் உட்பட சமூக நலத்துறையில் பதிவுப்பெற்ற 18,657 பேர்களுக்கும் ரிம500 பண உதவி வழங்கப்படும். வருகின்ற ஏப்ரல் 2020-க்குள் பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
4. வாடகைக்கார் ஓட்டுநர்கள் (2,248 பேர்) மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்கள் (318 பேர்) ஆகியோருக்கு கூடுதல் ரிம200 நிதி வழங்கப்படும், மீதமுள்ள ரிம 300 வருடாந்திர ஊக்கப் பணத்தோடு சேர்ந்து மொத்தமாக ரிம500 ஏப்ரல் 2020-க்குள் வழங்கப்படும்.
5.பினாங்கில் உள்ள இ-ஹெயிலிங் ஓட்டுநர்களுக்கு ரிம300 நிதியுதவியை 10,000 ஓட்டுநர்கள் பயன்பெறுவர்.
6.மாநில அரசு வாடகை வீடு மற்றும் பி.பி.ஆர் வீடமைப்புகளில் வசிக்கும் 4,860 குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாத வாடகை விலக்கு (ஏப்ரல் மற்றும் மே 2020).
7. மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்களின்
பொதுச் சந்தைகள், கடைகள் உள்ளடக்கிய வணிக வளாகங்களுக்கு ஒரு மாத வாடகை விலக்கு. இந்த வாடகை விலக்கு ஏப்ரல் 2020 நடைமுறைக்கு வருகிறது.இது 10,999 வணிக வளாகங்களை உள்ளடக்கியது. கம்போங் நிர்வாக மேம்பாடு உறுப்பினர்கள் இந்த தரபினரிடம் இருந்து வாடகை வசூலிக்காமல் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
8.பினாங்கு ஜாகாட் மூலம் வசதிக்குறைந்த இஸ்லாம் சமூகத்திற்கு உதவ ரிம3 மில்லியன் உதவி.
9. பினாங்கு இஸ்லாமிய மத விவகாரங்கள் துறையின் மூலம் பராமரிப்பு, துப்புரவு மற்றும் கிருமிநாசினி செலவினங்களுக்கு நிதியளிக்க மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு (226 மசூதி) ரிம 1000 மற்றும் சுராவ் (538) ரிம500 நிதி உதவி.
10.கோவிட்-19ல் பாதிக்கப்பட்டவருக்கு ரிம500 மற்றும் இறந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு ரிம1,000 பண உதவி பெறுவர்.
11.கோவிட்-19ன் இரு ஊராட்சி மன்றங்களின் சிறப்புப் படையின் 4,791 முன்னணி வரிசை வீரர்களுக்கு ரிம 300 சிறப்பு ஊக்கத்தொகை.
12.மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில சுகாதாரத் துறை, மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்), மலேசிய ஆயுதப்படைகள் (ஏ.டி.எம்), பாதுகாப்புப் படை (ஏ.பி.ஏ.எம்), குடிநுழைவுத் துறை மற்றும் ரெலா போன்ற வீரர்களை அங்கீகரிக்க ரிம 300 ஊக்கத்தொகை.
13.பாதுகாப்பு பொருட்களான முகக் கவசம், கைத்தூய்மி, வெப்பமானிகள் போன்ற பொருட்களுக்காக ரிம10கோடி நிதி ஒதுக்கீடு. பினாங்கு மாநில அரசின் பயன்பாட்டிற்காக 6கோடி முகக் கவசம் அழிப்பானை செய்யப்பட்டுள்ளது.
14. மைக்ரோ & சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) தொழில்முனைவோர் இந்த கடினமான தருணத்தை எதிர்கொள்ள வட்டியற்ற கடன்கள் பெறுவர். கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது
15.உள்ளூர் சமூக நிவாரண நிதியாக 40 மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரிம30,000 சிறப்பு நிதி ஒதுக்கீடு.
16. கட்டாய வரிவிதிப்பு அல்லது நில வரிக்கு மூன்று மாத காலக்கெடுவை நீட்டித்தல், மாநில அரசு வீடு வாடகை கொள்முதல் திட்டம் (ஆர்.எஸ்.கே.என்) மற்றும் நம்பிக்கை கடன் திட்டம், தொழில் முனைவோர் நிதி மற்றும் மாணவர் கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் நீட்டிப்பு.
மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க தனியார் துறையினரும் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளை வழங்குவதில் பங்கு வகிக்குமாறு சாவ் கொன் யாவ் கோரிக்கை விடுத்தார்.