ஜார்ச்டவுன் – கோவிட்-19 தாக்கம் குறைவாகக் கொண்ட தரப்பினருக்காக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சை மையம் இங்குள்ள காம்ப்ளெக்ஸ் பெஞ்யயாங் அரங்கத்தில் செயல்படவுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல ஆட்சிக்குழு உறுப்பினர், பீ பூன் போ, புலனம் வாயிலாக தொடர்புக் கொண்டபோது, மலேசிய சுகாதார அமைச்சின் (எம்.ஓ.எச்) வேண்டுகோளுக்கு இணங்க தனிமைப்படுத்தப்பட்ட மையம் இப்போது தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
“இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம், கோவிட்-19 தொற்றுநோயிக்கான அறிகுறி மற்றும் கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இன்று பிற்பகல் 2:00 மணியளவில் முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில், மலேசியா புத்தீஸ் தன்னார்வலர்களான சூ-சி மெரிட்ஸ் சமூகத்தினர் (சூ-சி) மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து இந்த அரங்கத்திற்குத்
தேவையான அனைத்து உபகரணங்களையும் அடுக்கி வைப்பதைக் கண்கூடாக காண முடிந்தது.
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதை தடுக்க முன் வரிசை பணியாளர்கள், குறிப்பாக மருத்துவக் குழுவுக்கு உதவுவதற்காக, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சை மையங்களை தயார் செய்ய பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாக, சூ-சி தலைவர் கூ பூ லியோங் கூறினார்.
“இந்த மாநிலத்தில் சமூகத்திற்கான ஆதரவு மற்றும் அக்கறையினை காண்பிக்கும் பொருட்டு இங்கு உதவ முன் வந்ததாகக் கூறினார்.
“அதுமட்டுமின்றி, 100 மெத்தை மற்றும் தலையணைகள் தவிர, ஆறு உயர் திறன் கொண்ட விசிறிகளையும், இரண்டு நீர் டிஸ்பென்சர்களையும் இந்த மையத்தில் ஏற்பாடுச் செய்து கொடுத்துள்ளோம்.
” தொடக்கத்தில் 100 படுக்கைகள் இந்த அங்கத்தில் வைக்க திட்டமிடப்பட்டன. இருப்பினும், 90 படுக்கைகள் மட்டுமே இந்த அரங்கத்தில் வைக்க முடிந்தது, என்றார்.
பினாங்கு மருத்துவமனையின் உதவி இயக்குநர் டாக்டர். கோ ஹின் குவாங் மற்றும் மருத்துவமனையின் சில மருத்துவ ஊழியர்களும் இங்கு வருகையளித்தனர்.