ஜார்ச்டவுன் – வீடமைப்பு, உள்ளூராட்சி, கிராமம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ பினாங்கு மாநிலத்தில் கோவிட்-19 தொற்று நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் மீண்டும் பொது மக்கள் உடனடியாக கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இன்று காலையில் பண்டார் பாரு ஆயிர் ஈத்தாம், ஜாலான் அங்சானா சுகாதார கிளினிக்கில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்ற பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் ஜெக்டிப் இதனைத் தெரிவித்தார்.
ஜெக்டிப் கூற்றுப்படி, கோவிட்-19 தொற்றுநோய் பரப்புவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி)பின்பற்றுவதோடு மட்டுமின்றி தடுப்பூசி பெறுவதும் ஒரு முக்கியமான செயல்முறையாகும்.
“தற்போது பினாங்கு மாநிலத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அந்தந்த தொகுதிகளில் பதிவு திட்டத்தை தீவிரமாக செயல் படுத்துகின்றனர் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
“டத்தோ கெராமாட் தொகுதியில் உள்ள பொது மக்கள் தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்வதை உறுதிச் செய்வதற்காக, மார்ச் 27 மற்றும் 28 -ஆம் தேதிகளில் பதிவு கியோஸ்கள் பல இடங்களில் இயங்கப்படும்.
“இந்த முயற்சி வருகின்ற ஏப்ரல் மாதம் தேசிய கோவிட்-19 நோய் தடுப்பு திட்டத்தின் இரண்டாம் பிரிவு தொடங்குவதை முன்னிட்டு ஊக்குவிக்கப்படுகிறது,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் கூறினார்.
“இந்த கியோஸ் பொது மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி பெற பதிவு செய்வதோடு, முன்னதாக பதிவு செய்தவர்களுக்கு சரிபார்க்கவும் உதவும்,” என கூறினார்.
கியோஸ் சேவையின் விவரங்கள் பின்வருமாறு;
மார்ச் 27, 2021 (சனிக்கிழமை) – காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை
i.லோரோங் கூலிட், அஸ்தகா
ii. தாமான் பிரி ஸ்கூல் பொது சந்தை
iii. ஜாலான் குவாந்தான் பொது சந்தை
iv. தாமான் ஜஜார்
மார்ச் 28, 2021 (ஞாயிற்றுக்கிழமை) – காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.
i. ஜாலான் மக்லூம், அரங்கம்
ii. கெபுன் லாமா, மசூதி ஆச்சே
iii. மசூதி ரவணா
கடந்த மார்ச்,18 முதல் 25-ஆம் தேதி வரை எஸ்.ஓ.பி-ஐ பின்பற்ற தவறிய 1,551 பல்நோக்கு வளாகங்கள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக ஜெக்டிப் கூறினார்.
“இந்த பல்நோக்கு வளாகங்கள் பட்டியலில் வணிக வளாகங்கள்; உல்லாச மையங்கள்; அங்காடி வியாபாரிகள்; பொதுச் சந்தைகள், உணவகம் மற்றும் தொழிற்சாலைகள் இடம்பெறுகின்றன.
“பொது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த எஸ்.ஓ.பி-க்கு இணங்காத தரப்பினர் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்க இரு ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டார்.