கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்படுத்த பி.கே.பி 3.0 அமலாக்கம் கடுமையாக்க வேண்டும்

Admin

செபராங் ஜெயா – கோவிட்-19 தொற்றுநோய் புதிய வழக்குகள் அதிகரிப்பதன் காரணமாக கடந்த மே,12 முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை  3.0 ஐ மீண்டும் செயல்படுத்துவதன் மூலம்  பல்வேறு தரப்புகளில், குறிப்பாக சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக காணப்படுகிறது.

செபராங் ஜெயா சந்தையில் முத்துச் செய்திகள் நாளிதழ் சந்தித்த பெரும்பாலான
வர்த்தகர்கள், பி.கே.பி தொடர்ந்து செயல்படுத்தப்படுவதால் வியாபாரம் பெரும் சரிவு காண்பதாக கவலையை வெளிப்படுத்தினர்.

“வர்த்தகர்கள் என்ற வகையில், எங்கள் வணிகம் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்ய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, ஏனெனில் இது எங்களின்  ஒரே வருமான ஆதாரமாகும், ” என முப்பது ஆண்டுகளாக செபராங் ஜெயா பொதுச் சந்தையில் பலசரக்கு வியாபாரம் செய்து வரும் தங்கம், 69 தெரிவித்தார்.

சிறு வியாபாரி தங்கம்

ஆகையால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பி.கே.பி 1.0 உடன் ஒப்பிடும்போது நாட்டில் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் குறைந்த செயல்திறன் கொண்டதாக கருதப்படும் பி.கே.பி 3.0-ஐ மீண்டும் மதிப்பீடு செய்யுமாறு மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

“அரசாங்கம் அமல்படுத்தும் அனைத்து விதிகளும் நம் அனைவரின் நலனுக்காகவே என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் பி.கே.பி 3.0 ஐ மேலும் கடுமையாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், இதனால் அதன் செயலாக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

“தொற்றுநோயின் பரவலைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்ட பி.கே.பி 1.0 ஐ இந்த முறை செயல்படுத்தும் பி.கே.பி 3.0-க்கு வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும்.

“மேலும், குடிமக்கள் என்ற வகையில், அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக  நடைமுறைகளும் (எஸ்.ஓ.பி) முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். முடிந்த வரையில் சிறுவர்களை சந்தை போன்ற பொது இடங்களுக்கு அழைத்து வருவதை தவிர்ப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். பொதுமக்களாகிய நாம் நமது சுய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்”, என்றார்.

இதனிடையே, ஒவ்வொரு முறையும் அரசாங்கம் பி.கே.பி-ஐ செயல்படுத்தும்போது, எங்களைப் போன்ற சிறு வணிகர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள், ஏனெனில் வாடிக்கையாளர்களின் பற்றாக்குறையால் அவர்களின் வருமானம் குறைகிறது.

பூ வியாபாரம் செய்து வரும் முனியாம்மா

“மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பி.கே.பி செயல்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தால், மக்களின் வாழ்வாதாரம் கடினமாக இருக்கும், குறிப்பாக தினசரி வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் சிரமங்களை எதிர்கொள்வார்கள்”, என 30 ஆண்டுகளாக சந்தையில் பூ வியாபாரம் செய்து வரும் முனியாம்மா,70 குறிப்பிட்டார்.

“பி.கே.பி அமலாக்கத்தை கடுமையாக்காமல் இப்பொழுது இருப்பது போல  தளர்வு வழங்கப்பட்டால் எங்களை போன்ற வணிகர்களின் தினசரி வருமானம் பாதிக்காது. மேலும், வீட்டில் அமர்ந்திருந்தால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இன்னும் பாதிப்படைய கூடும்”, என்றார்.

தொடர்ந்து, 26 ஆண்டு அதே சந்தையில் மளிகை கடை வியாபாரம் செய்து வரும் செல்வி, 52 வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறிப்பாக வார நாட்களில் இப்போது மிகக் குறைவு, இந்த பொதுச் சந்தைக்கு வருபவர்களை மட்டுமே நம்பி வியாபாரம் செய்கிறோம்,” என்றார்.

மளிகை கடை வியாபாரி செல்வி

பினாங்கில் பாகான் ஆஜாம் சந்தை மற்றும் ஜெலுத்தோங் சந்தை கோவிட்-19 கிளாஸ்டர் சம்பந்தமாக கருத்துரைத்த போது  ஒரு தனிநபராக நாம் முதலில் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிதல், கைத்தூய்மி பயன்படுத்துதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என செல்வி வலியுறுத்தினார்.

அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை வீரியம் அடைந்துள்ள இக்காலத்தில் முடிந்த வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசிய தேவை இருக்குமாயின் பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு வெளியில் செல்லலாம். முடிந்த வரையில் அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு நல்கி இத்தொற்று சங்கிலியை உடைப்போம்.