வருகின்ற பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் கொண்டாடவிருக்கும் 234-ஆவது தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல் நாளன்று பினாங்கு அருள்மிகு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் தங்க இரத ஊர்வலம் லெபோ பந்தாய் குயீன் ஸ்திரிட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு ஆலயத்தை சென்றடையும் என மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி அவ்வாலய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
நான்காவது ஆண்டாக தங்க இரதத்தில் வேல் முன்னோக்கிச் செல்ல பின் தொடர்ந்து முருகப்பெருமான் வெள்ளி இரத்ததில் பக்தர்களுக்கு அருள் காட்சியளிப்பார்.
இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டம் வார இறுதியில் இடம்பெறுவதால் சுமார் 1.3மில்லியன் மக்கள் கூடுவர் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இம்முறை 160 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படும். மேலும், இவ்வாண்டு தண்ணீர் பந்தல்களில் பக்தி பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்படும் எனவும் அப்பந்தல்களின் முன் ஆடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் பேராசிரியர் ப.இராமசாமி குறிப்பிட்டார்.
தொடர்ந்து கோரோனா கிருமியால் அச்சுறுத்தலில் இருக்கும் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முகமுடி போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என பேராசிரியர் பொது மக்களுக்கு நினைவுறுத்தினார்.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காவடிகளை இறை சிந்தனையோடு அமைக்கப்பட வேண்டும்; சின்னங்கள் அடங்கிய காவடிகளை ஆலய நிர்வாகம் அனுமதிக்காது என ஶ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.
இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டு அர்ச்சனை மற்றும் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் பிப்ரவரி 7-ஆம் நாள் வருகையளித்து முருகப்பெருமானின் ஆசிர்வாதம் பெற அழைக்கப்படுகின்றனர். மேலும் தங்க இரத ஊர்வலத்தில் கலந்து கொண்டு இரதத்தை இழுக்க விரும்ப்பும் பக்தர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
பக்தகோடிகள் அமைதியான முறையில் சமய நெறியோடும் பக்தியுடனும் தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் ஆசிப்பெற அழைக்கப்படுகின்றனர்.