சமூகத்துடனான சந்திப்புகள் தொடர்கிறது

Admin

 

புக்கிட் தம்புன் – பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், மக்களின் கருத்துகளையும் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கண்டறிய, ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ என்ற திட்டத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ், மக்கள் பிரதிநிதியாகத் தன்னை தேர்வுச் செய்ததற்காக பத்து காவான் வாக்காளர்களுக்கு நன்றித் தெரிவித்தார்.

“15வது பொதுத் தேர்தல் பிரச்சார காலத்தில் பத்து காவானில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

“என்னால் முடிந்தவரை பல பகுதிகளுக்குச் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ள முற்பட்டேன்.

“இந்த சமூகத்துடனான சந்திப்புக் கூட்டங்கள் எனக்கும் எனது குழுவிற்கும் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே, இப்போது நான் ஜெலாஜாவைத் தொடர்கிறேன், குறிப்பாக பொதுத் தேர்தலுக்கு முன்பு நான் பார்வையிட முடியாத பகுதிகளுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கிறேன்,” என்று அவர் இன்று தாமான் முத்தியாரா செம்பாக்காவைப் பார்வையிட்டப் பிறகு தனது உரையில் இவ்வாறு கூறினார்.

“பத்து காவான் மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் இடம்பெறுகிறது, என்று சாவ் கூறினார்.

“பல சந்திப்புகள் மற்றும் அமர்வுகளுக்குப் பிறகு, இங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை போக்குவரத்து நெரிசல் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

“போக்குவரத்து சிக்கல்கள் தவிர்த்து பிற விஷயங்களும் மாநில அரசாங்கத்திடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வரும் அவரது குழுவினரும் தாமான் முறாய் ஜெயாவில் அவ்வட்டார மக்களை சந்தித்தனர். புக்கிட் தம்பூன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக் அவர்களும் கலந்து கொண்டார்.

முதல்வர் மற்றும் கோவும் ஜெலாஜாவின் போது சந்தித்தவர்களுக்கு ஆரஞ்சுப் பழங்களை வழங்கினர்.

பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் சாவ், தனது சந்திப்புகள் மூலம் முடிந்தவரை பொது மக்களை சந்திக்க முற்படுகிறார் என சட்டமன்ற உறுப்பினர் கூய் கூறினார்.

“பத்து காவான் மிகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதியாகும். புக்கிட் தம்புன், பத்து காவான் ஆகிய இடங்களில் இன்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இணக்கம் கொண்டுள்ளார். அவர் ஏழு அல்லது எட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பது பாராட்டக்குரியது,” என்று கூய் கூறினார்.