கெபூன் பூங்கா – உலக வாழ் தமிழர்களும் தை முதல் நாளை பொங்கல் தினமாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடுகின்றனர். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை பிரமாண்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அவ்வகையில், இராஜாஜி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினரான வோங் ஒன் வாய் உடன் இணைந்து இப்பொங்கல் விழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடினர்.
நான்கு தினங்களுக்கு அனுசரிக்கப்படும் இந்த அறுவடை திருழா பூமி, மாடு, விவசாயி மற்றும் சூரியன் ஆகிய இயற்கை வளங்களுக்கு நன்றிக்கூறும் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.
மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்சட்டிக்கு முற்புறம் வண்ண கோலங்கள் இடப்பட்டு அவ்விடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. நாடாளுமன்ற உறுப்பினரான வோங் ஒன் வாய்மண் சட்டியில் பால் ஊற்றி பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
பல்லின மக்கள் வாழும் இந்த பினாங்கு மாநிலத்தில் ஆண்டு முழுவதும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பறைச்சாற்றும் வகையில் பெருநாட்கள் மற்றும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. உதாரணமாக நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, தைப்பூசம், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் விசாக தினம் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும், என நாடாளுமன்ற உறுப்பினரான வோங் ஒன் வாய் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
அனைவரும் தங்களின் மதம் மற்றும் மொழியை மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும். இதன் மூலம் வருங்கால தலைமுறையினர் இப்பாரம்பரியத்தை மறக்க மாட்டர். ஒரு வலுமான குடும்பத்தையும் சமூகத்தையும் உருவாக்க பாரம்பரியம் சிறந்த கருவியாக திகழ்வதால் அதனைப் பாதுகாக்க வேண்டும், என்றார்.
அதுமட்டுமின்றி பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.