ஜார்ச்டவுன் – சிறுவயதில் இருந்தே கலையில் ஆர்வமும், தனிக் கலைக் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற ஆசையும் கொண்ட ஓவியர் குணபாலன் தனது 77வது வயதில் அந்த இலட்சியத்தை அடைந்தார்.
உடல்நலம் குன்றியப் போதிலும், முன்னாள் பாடாங் லாலாங் மாநில சட்டமன்ற உறுப்பினரும் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சோங் எங் அவர்களின் கணவரான குணபாலன் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் ஒரு கண்காட்சியை ஏற்று நடத்தினார்.
“இந்தக் கண்காட்சியை நடத்துவதற்கு எனது வாழ்க்கையின் துணைவியாரான சோங் எங் அவர்கள் உதவிக்கரம் நீட்டியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
“நான் முதலில் அமெரிக்காவில் எனது படிப்பைத் தொடர்ந்தேன், அங்கு நான் களிமண் கலை பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.
“1990-ல் நான் மலேசியாவுக்குத் திரும்பியவுடன், ஈக்வேட்டர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினேன்.
“1995 இல் இண்டெக் கல்லூரியில் அவர் நுழைந்த பிறகு, அதே ஆண்டு சோங் எங் இந்த வரலாற்று புகழ்பெற்ற மாநில சட்டமன்ற அரங்கத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்,” என்று குணபாலன் தனது ‘சமூக கலாச்சார நீதிக் கலை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலைக் கண்காட்சியில் சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
இந்தக் கண்காட்சியில், பல்வேறு கருப்பொருள்கள், வாழ்க்கை பயணங்கள் மற்றும் வரலாற்றை சிறப்பிக்கும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் உட்பட மொத்தம் 69 கலைப்படைப்புகள் பொதுமக்களுக்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
ஓவியரை பொருத்தவரை, கடற்கரை மணலில் சிக்கிய மீன் என்ற ஓவியம் அவரை மட்டுமின்றி நிருபர்களின் கவனத்தையும் ஈர்க்கும் ஓவியமாகவும் திகழ்ந்தது.
“நான் இந்த மீனை சோங் எங்குடன் ஒப்பிடுகிறேன், ஏனென்றால் 1995 இல் அவர் இந்த மாநில சட்டசபையில் ஒரே ஒரு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே வலம் வந்தார்.
“எனவே, நான் இந்த இடத்தை கண்காட்சிக்கான இடமாக தேர்வுச் செய்தேன். ஏனெனில், இது அரசியல் அரங்கில் அவர் காலத்தின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது,” என்றார்.
‘சமூகப் பண்பாட்டு நீதிக் கலை’ கண்காட்சி ஆறு தொடர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய காலனித்துவ காலத்தில் இரயில் பாதைகளை உருவாக்குவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்களை நினைவுக்கூறும் 30 கலைப்படைப்புகளை உள்ளடக்கிய ‘The Faces of the Forgotten’ எனும் தொடர் இதனைப் பறைச்சாற்றுகிறது.
உலகின் மிகப்பெரிய இரப்பர் உற்பத்தியாளராக மலேசியாவின் வெற்றிக்குக் காரணமான இரப்பர் மரம் வெட்டுபவர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் பங்களிப்பை ‘‘Roots and Tracks’ எனும் தொடர் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், ‘Echoes of the Divine’எனும் தொடர் குணபாலனின் இலக்கின் படைப்பான கிழக்கு தத்துவம், ஆன்மீக உருவங்கள் மற்றும் குறுக்கு கலாச்சார அடையாளங்கள் மற்றும் கலாச்சார சந்திப்புகளை ஆராய்கிறது.
நான்காவது தொடர் ‘The Himalayan Journey’ ஆசிரியர்களுடன் இணைந்து பசுமை பள்ளத்தாக்குகள் மற்றும் ஓடும் ஆறுகள் கொண்ட இமய மலைப் பகுதிக்கு அவர் மேற்கொண்ட ஆன்மீகப் பயணத்தால் ஈர்க்கப்பட்டது.
ஐந்தாவது தொடரான ‘Echoes of Renewal’ வெள்ளத்தால் சேதமடைந்த பழைய நாளிதழ்களைப் பயன்படுத்தி பல படைப்புகளையும், கடைசித் தொடரான ‘Fragments of Resilience’ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட குணபாலனின் போராட்டத்தையும் விடாமுயற்சியையும் ஆவணப்படுத்துகிறது. இது \உணர்ச்சி மற்றும் உடல் ரீதியானப் பயணத்தைப் பிரதிபலிக்கிறது.
இத்தொடர் குறித்து கருத்து தெரிவித்த குணபாலன், தாய்லாந்தில் இரயில் பாதை அமைக்க இரண்டாம் உலகப் போரின் போது தனது தாத்தா உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இரயில் மற்றும் இரப்பர் பற்றிய ஆழமான நினைவுகள் தனக்கு இருப்பதாகக் கூறினார்.
அவரது தாத்தா உட்பட ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிவிட்டதாகவும், அந்த தனிப்பட்ட கதை தான் தனது முதல் கண்காட்சிக்கு ‘சமூக கலாச்சார நீதி கலை’ என்று பெயரிடத் தூண்டியது எனக் கூறினார்.
கூடுதலாக, குணபாலன் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையின் மீதான நம்பிக்கைக்கு ஏற்ப, இந்த பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதன் மூலம் தூக்கி எறியப்பட்ட சறுக்கல் மரங்கள் மற்றும் உடைந்த ஓடுகள் போன்றவற்றுக்கு ‘புதிய வாழ்க்கையை’ அளிக்கும் திறனுக்காகவும் அறியப்படுகிறார்.