பிறை – பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு பிறை செத் மார்க் ஆரம்பப்பள்ளியின் ஹாக்கி விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
“பள்ளி மாணவர்களிடம் தொடங்கும் சமூக ஒற்றுமை உணர்வு தொடர்ந்து மலேசிய மக்களின் புரிந்துணர்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் வித்திடுகிறது,” என்று பிறை செத் மார்க் பள்ளியின் மேலாளர் வாரியக்குழு ஏற்பாட்டில் நடைபெற்ற ஆரம்பப் பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு இவ்வாறு கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து இனங்களும் பங்கேற்பதன் வாயிலாக நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கிடையிலான ஒற்றுமை வலுப்படுத்த இயலும். மேலும், இது மலேசியர்களிடையே நல்லிணக்கத்தை மேலோங்க வழிவகுக்கும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
“உலகில் பல நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளேன். அதில் சில நாடுகளில் ஒரு சில இனங்கள் மட்டுமே வாழ்கின்றனர், நமது நாட்டை பொருத்தவரை பல்லினம் மக்கள் வாழும் நாடாக திகழ்கின்றது. அவ்வகையில் விளையாட்டுப் போட்டி என்று வந்தால் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு நல்லிணக்கத்துடன் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதன் வாயிலாக நமது புரிந்துணர்வு மேலோங்குகின்றது,” என மேலும் சுந்தராஜு வலியுறுத்தினார்.
“இதனிடையே, மக்களின் பிரதிநிதியாக, பினாங்கு மாநிலம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக பிறை சட்டமன்ற தொகுதியில் உள்ள மாணவர்களிடையே திறமை மற்றும் ஆளுமை மேம்பாட்டு முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பதற்கு உறுதி பூண்டுள்ளேன்.
“பினாங்கு2030 இலக்கின் வியூகம் C2-க்கு (Strategi C2) ஏற்ப சமூக வாழ்வில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர்களின் பங்களிப்பை அதிகரிக்க இது போன்ற முயற்சிகள் இனிவரும் காலங்களில் தொடரும்”, என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அறுவர் கிண்ண ஹாக்கிப் போட்டியில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஹாக்கி குழுக்கள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் புக்கிட் மெர்தாஜாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பழனியாண்டி தமிழ்ப்பள்ளி மற்றும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பள்ளி மாணவர்களிடையே ஹாக்கி விளையாட்டுப் போட்டி திறனை வளர்க்க இதுப் போன்ற ஹாக்கி போட்டி சிறந்த வாய்ப்பாக அமையுமென ஹாக்கி போட்டியை ஏற்பாடு செய்ய அதன் ஆலோசகர் உலகநாதன் தெரிவித்தார்.
இந்த ஹாக்கிப் போட்டியில் பிறை செத் மார்க் பள்ளியின் தலைமையாசிரியர் ஹஜி முகமட் முனிர் இப்ராஹிம்,பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் ரிவேரன்ட் அந்தோணி ஜூட் அருளப்பன், பயிற்சியாளர் கி.பிரபாகரன், செபராங் பிறை மத்திய மாவட்டக் கல்வி இலாக்காவின் மாணவர் மேம்பாட்டுப் பிரிவு சேர்ந்த சம்சோல் காசிம், மேலாளர் வாரியக்குழு உறுப்பினர் தேவா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிறை செத் மார்க் பள்ளியின் ஏற்பாட்டில் நடந்த ஹாக்கிப் போட்டியில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடி சுழற்கிண்ணத்தைத் தட்டிச் சென்றனர். இரண்டாம் நிலையில் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியின் ‘புலிகள்’ குழுவினர் தட்டிச் சென்றனர். மூன்றாம் நிலையில் பிறை தேசிய வகை செத் மார்க் பள்ளி வாகை சூடியது.