பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு பினாங்கு வாழ் மக்களின் நலனில் அதிக அக்கறைக்காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடரும் முயற்சியில் கடந்த 21 மார்ச் 2015-ஆம் திகதி பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் ஏற்பாட்டில் சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சாரம் (Kempen Keselamatan Komuniti & Kesihatan) தாமான் இண்ராவாசேவில் இனிதே நடைபெற்றது. அவ்வட்டார மக்களிடையே சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பற்றிய விழிப்புணர்வை மேலோங்கச் செய்யவே இப்பிரச்சாரம் நடத்தப்பட்டது .
பிறை வட்டாரத்தில் தலை தூக்கியிருக்கும் டிங்கிக் காய்ச்சல் பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் பொருட்டு பிறை சமூக மேம்பாடு மற்றும் முன்னேற்ற கழகம் தாமான் இண்ராவாசே பொதுமக்களுடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடுச் செய்திருந்திருந்தனர். அதோடு, பொதுமக்களுக்கு டிங்கிக் காய்ச்சலின் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய செபெராங் பிறை மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ரஃபிடா அவர்களின் சொற்பொழிவும் நடைபெற்றது. தொடர்ந்து, பண்டார் பெர்டா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஹர்தினியின் பாதுகாப்பு பற்றிய உரையும் இடம்பெற்றது. இதன்வழி, அவ்வட்டாரத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அவரின் உரை அமைந்திருந்தது .
இதனிடையே, நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய பிறை சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் பொதுமக்களுக்குச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பொதுமக்களைத் தங்களின் வீடுகளைத் தூய்மையாகவும் ஏய்டிஸ் கொசுக்கள் இனவிருத்திச் செய்வதைத் தவிர்ப்பதையும் உறுதிச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வை வெற்றியடையச் செய்த அனைத்து தரப்பினருக்கும் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். இதனிடையே, அவ்வட்டார பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த Combi For Behavioral Impact உறுப்பினர்களுக்கு தற்காலிக அலுவகத்தையும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் அவர்கள்.