சமூக வளர்ச்சியை வலுப்படுத்த சமயம் சிறந்த வழிகாட்டி

Admin

பத்து காவான் – “இன்றைய எல்லையற்ற சகாப்தத்தின் சவால்களை எதிர்கொள்வதில், சமூக வளர்ச்சி மிகவும் ஆழமான தாக்கத்தை அளிக்கிறது.

“இளைஞர்கள் எல்லையற்ற சகாப்தத்தின் சவால்களை எதிர்கொள்ளும் தொடர்புடைய தலைமுறையாகும். இதில் மனநலப் பிரச்சனைகள், ஆரோக்கியமற்ற சமூகமயமாக்கல், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் இணையப் போர் ஆகியவை அடங்கும்.

“எனவே, அடிப்படை மத நம்பிக்கைகள் மற்றும் மதப் போதனைகள் ஆகியவை இந்த பாதிக்கப்பட்ட குழுக்களின் சமூக வளர்ச்சியை மேம்படுத்த முக்கியமான ஆதாரமாக உருமாற்றம் காணும்,” என்று முன்னாள் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் 45வது திருமுறை ஓதும் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

மாநில அரசாங்கம், மலேசிய இந்து சங்கம் மற்றும் தொடர்புடைய அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்பில்  இளைஞர்களுக்கு மதப் போதனையை வழங்குவதில் சிறந்த சேவையாற்றி வருவது மட்டுமின்றி இளைஞர்களுக்கான நிலையான மற்றும் வலுவான அடையாளத்தை உருவாக்கும் அம்சத்திலும் பெரிதும் உதவ
முன்னெடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் காட்டும் முனைப்பைப் பாராட்டுவதாக சாவ் தெரிவித்தார்.

பினாங்கு2030 இலக்கை முன்னிருத்தி இந்த மாநிலத்தில் உயர்தர மனித வளம் உருவாக்கும் நோக்கத்தில் சிறந்த இளைஞர் மேம்பாட்டுக்கு வித்திட வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 4 முதல் 35 வயதுடைய 130 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி,பவித்ரா பாலர்பள்ளி மற்றும் துங்கு பய்னூன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், மேடை பேச்சுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி என சமயம் மற்றும் கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.

தொடக்கமாக, வட்டார ரீதியில் நடத்தப்படும் இந்த திருமுறை ஓதும் போட்டியில் வெற்றிப் பெறும் மாணவர்கள் மாநில ரீதியிலான போட்டியில் கலந்து கொள்வர். இப்போட்டியில் வெற்றி வாகைச் சூடும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவர் என அறியப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் புக்கிட் தம்புன் மாநில சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக்; மலேசிய இந்து சங்கம், பினாங்கு மாநிலத் தலைவர் சாந்திரசேகரன்; மாநிலத் துணைத் தலைவர் விவேக நாயகன் திரு.தர்மன்; பத்து காவான் வட்டாரப் பேரவைத் தலைவர் திருமதி சரோஜா மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.