ஜோர்ச்டவுன் – “பினாங்கு மாநில அரசு அனைத்து விமர்சனங்களையும் திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொண்டாலும் பெரும்பான்மை கொண்ட தரப்பினர் சிறுபான்பை தரப்பினரை வீழ்த்த அனுமதிக்காது. சிறுபான்மையினரின் கருத்துகளுக்குச் செவி சாய்க்கப்படும் இருப்பினும் மாநில அரசு நடுநிலையாக செயல்பட்டு மாற்றங்கள் கொண்டு வரும்,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற இணை ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல விருந்தோம்பலில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.
“நாம் திறந்த மற்றும் வெளிப்படையான அரசாங்கமாக விளங்கினாலும் எதிர்ப்புகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கேட்பதற்கு வரன்முறை உண்டு. இதுவே ஒரு ஜனநாயக ஆட்சி சமூகத்தின் கொள்கையாகும்,” என மெதடிஸ் பாய்ஸ் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கூறினார்.
உங்கள் ஆலோசனைகள் சமூகத்திற்கு நன்மையும் மாநில அரசின் பணத்தையும் சேமிக்கும் வகையில் இடம்பெற்றால் கொள்கை அல்லது வழிகாட்டலில் மாற்றம் செய்ய வாய்ப்பு உண்டு என மேலும் தெரிவித்தார்.
“அதுமட்டுமின்றி வீடமைப்புத் திட்டங்களை நிறுத்த கூறும் தரப்பினர் மக்கள் தொகை அதிகரிப்பை நிறுத்த முடியுமா ? முடியும் என்றால் தற்போது இருக்கும் வீடமைப்புத் திட்டங்கள் பொது மக்களுக்குப் பொதுமானது”, என்றார். 1990-ஆம் ஆண்டு 0.7 மில்லியன் மக்கள் தொகை இருந்த பினாங்கு மாநிலத்தில் இன்று (2018) 1.77 மில்லியனாக அதிகரித்துள்ள வேளையில் 2019-ஆம் ஆண்டு இறுதியில் 1.8 மில்லியன் தொகை எட்டும் என எதிர்ப்பார்ப்பதாக சாவ் சொன்னார்.
1990-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மாநிலத்தில் பல சமூக மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இந்த மாநிலம் குறைவான நிலப்பரப்புக் கொண்டதால் மக்களின் தேவையைப் பூர்த்திச் செய்வதற்குப் பல சவால்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளன.
இந்நிகழ்வில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அவர் தம் துணைவியார் பேட்டி சியூ, குர்மிட் கோர்(அமரர் கர்பால் சிங் துணைவியார்), முதல்வரின் துணைவியார் தான் லீ கீ, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த நவம்பர் 9-ஆம் தேதி அறிவித்த 2019-ஆம் ஆண்டுக்கான வரவுச்செலவுத் திட்டம் ” முன்னோக்கிச் செல்லும் வரவுச்செலவு ” என புகழாறம் சூட்டினார் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ. மேலும், வாகன நெரிசலை எதிர்நோக்கும் பொது மக்களின் நன்மையைக் கருதி விரைவில் போக்குவரத்து பெருந்திட்டம் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாநில முதல்வர் அறிவித்த ‘பினாங்கு 2030′ இலக்கு வருகின்ற 50 ஆண்டுகளில் இம்மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கி வரையறுக்கப்பட்டுள்ளது, என்றார்.
கூட்டரசு அரசாங்கத்தின் நிதியைக் கொண்டு வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் , ஆயினும் கடந்த காலங்களில் இந்நிதி பினாங்கிற்கு புறக்கணிக்கப்பட்டது என வீடமைப்பு, உள்ளூர் அரசு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடுதல் ஆட்சிக்குழு உறுப்பினரான, ஜெக்டீப் சிங் டியோ கூறினார்.
கூட்டரசு அரசாங்கத்தின் ஆட்சி மாற்றத்தால் மக்கள் வீடமைப்புத் திட்டம் (பி.பி.ஆர்) கட்ட பினாங்கு மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ஏனெனில் பினாங்கில் கடந்த காலங்களில் பி.பி.ஆர் திட்டமும் புறக்கணிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.