சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, மின் மற்றும் மின்னணு கழிவுகளை முறையாக அகற்றபட வேண்டும்

Admin

 

செபராங் ஜெயா – உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெசன் ஹெங் மோய் லாய், மின் மற்றும் மின்னணு கழிவுகளை முறையாக அகற்றப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

பெருபான்மை மின்னணு பொருட்களில் உள்ள நச்சு கூறுகள் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

“மின் மற்றும் மின்னணு கழிவுகளைப் பிரத்தியேக முறையில் அகற்ற வேண்டும். ஏனெனில், அதன் கூறுகளில் நச்சு மற்றும் ஆபத்தான பொருட்களை உள்ளடக்கியுள்ளது.

“சரியான முறையில் அகற்றப்படாவிட்டால், அது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை விளைவிப்பது மட்டுமன்றி, மக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.

“மேலும், இந்தக் கழிவுகளை அகற்ற மற்றும் சேகரிக்கப் பிரத்தியேக
இடம் இல்லையெனில், அதனைச் சேகரிக்கும் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) ஆரஞ்சு ஹீரோக்கள் இந்த ஆபத்திற்கு ஆளாக நேரிடும்,” என்று அவர் வீட்டு உபயோக மின் மற்றும் மின்னணு பொருட்கள் சேகரிப்பு போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் இவ்வாறு கூறினார்.

இவ்விழாவில், மேயர் டத்தோ அசார் அர்ஷாத்; எம்.பி.எஸ்.பி செயலாளர், பட்ருல் அமீன் அப்துல் ஹமிட்; கவுன்சிலர்கள், சைக்கிள் ட்ரெண்ட் இண்டஸ்ட்ரீஸின் சென்.பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் டத்தோ காங் சூன் கியோங் மற்றும் Tsuneishi Kamtecs Corporation பொது மேலாளர், ஜி ஹூன் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு (2022) ஜனவரி,1 முதல் அக்டோபர்,30 வரை 10 மாதங்களாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 12 மறுசுழற்சி மையங்கள் பங்கேற்றது. இப்போட்டியின் வாயிலாக சேகரிக்கப்பட்ட மின் மற்றும் மின்னணு கழிவுப் பொருட்களின் எடை 25,802.5 கிலோகிராம் என்றும் மோய் லாய் தெரிவித்தார்.

“இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் கூறிய ஆட்சிக்குழு உறுப்பினர் ஹெங், செபராங் பிறையின் பரப்பளவை ஒப்பிடுகையில், 12 மின் மற்றும் மின்னணு கழிவுகளைச் சேகரிக்கும் மறுசுழற்சி மையங்களின் எண்ணிக்கைக் குறைவாகவே காணப்படுகிறது.

“மின் மற்றும் மின்னணு கழிவுகளை வாங்குவதற்கும் சேகரிப்பதற்கும் சுற்றுச்சூழல் துறையின் கீழ் உரிமம் பெற்ற நிறுவனங்களின் குறைவான எண்ணிக்கையும் இதற்கு ஒரு காரணமாக அமையக்கூடும், என அறிகிறேன்.

“எனவே, இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள தரப்பினருடன் திட்டமிடவும், ஒத்துழைக்கவும் மற்றும் தீர்வு காணவும் எம்.பி.எஸ்.பி இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம், செபராங் பிறை சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக சிறந்த முன்னேற்றங்களை அடைய முடியும்,” என்று ஜாவி மாநில சட்டமன்ற உறுப்பினருமான மொய் லாய் கருத்து தெரிவித்தார்.

இப்போட்டியில், 8,909 கி.கி மின் மற்றும் மின்னணு கழிவுகளை வெற்றிகரமாக சேகரித்த, தாமான் ஸ்ரீ ரம்பாய் பிரிவு II மற்றும் III ருக்கூன் தெதாங்கா மறுசுழற்சி சேகரிப்பு மையம் வெற்றி வாகைச் சூடி ரிம500 ரொக்கப் பரிசுடன் நற்சான்றிதழும் பெற்றுக் கொண்டது.