சுக்மா போட்டியில் பினாங்கு அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்

ஜார்ச்டவுன் – கோலாலம்பூரில் வருகின்ற செப்டம்பர் 16 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் 20வது மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) பினாங்கு அணி சிறந்த விளையாட்டு வீரர்களைக் களம் இறக்கி வெற்றி வாகைச் சூட இணக்கம் கொண்டுள்ளது.

பினாங்கு மாநில விளையாட்டு மன்ற (MSNPP) இயக்குனர், ஹெரி சாய் ஹெங் சுவா, இம்முறை பினாங்கு அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட பதக்க இலக்கை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஹெரி சாய் ஹெங் சுவா

“இந்த முறை சுக்மாவில் போட்டியிட நாங்கள் அனுப்பும் விளையாட்டு வீரர்கள், குறிப்பாக உடல் வலிமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலை நிறைவுச் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

“அதுமட்டுமின்றி, அவர்கள் MNSPP நிர்ணயித்த விதிகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஓட்டக்காரர்கள், கோலாலம்பூர் சுக்மாவில் பங்கேற்பதற்காக பட்டியலிடுவதற்கு முன் நிர்ணயித்த கால வரம்பை அவர்கள் அடைய வேண்டும்.

“நாங்கள் விரும்பும் நிலையை அடையத் தவறிய விளையாட்டு வீரர்கள் அல்லது விளையாட்டுகளில், இந்த முறை நடைபெறும் சுக்மாவில் பங்கேற்பதில் இருந்து  விலகிக் கொண்டதாகக் கூறினார்.

“ஏனென்றால், தகுதிப் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே இம்முறை போட்டியில் பங்கேற்பார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். இதனால் நிர்ணயிக்கப்பட்ட பதக்க இலக்கை அடைய முடியும்,” என்று அவர் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபரைத் தொடர்பு கொண்டபோது இவ்வாறு கூறினார்.

பினாங்கு அணிக்கான விளையாட்டு வீரர்கள் 95% தயார் நிலையில் இருப்பதாக, ஹெங் ஹுவா கூறினார்.

“மீதமுள்ள ஐந்து விழுக்காடானது, விளையாட்டு வீரர்களின் இறுதிக் கட்ட தயார் நிலையைக் குறிக்கிறது. இதன் மூலம், அவர்கள் சுக்மாவில் ஊக்கமளிக்கும் செயல்திறனைக் காட்ட முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் காரணமாக பினாங்கு அணியும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

“இந்தக் காலக்கட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பைக் கடந்து வெளிநாட்டில் படிப்பைத் தொடரும் நமது விளையாட்டு வீரர்களில் சிலர் வேலைக்கும் சென்றுவிட்டனர்.

“இந்த சூழ்நிலையில் புதிய விளையாட்டு வீரர்களை கொண்டு அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,” என்றார்.

அனைத்து விளையாட்டுகளிலும் இந்த முறை பினாங்கு மாநில அணி பதக்கங்களை வெல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கி.பகிரதன்

இதற்கிடையில், 20 வயதான கி.பகிரதன், பினாங்குக் குழு தங்கப் பதக்கத்தை இலக்காகக் குவித்து, குறைந்தபட்சம் போட்டியிடும் அணிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் அங்கம் வகிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாறாக, இம்முறை போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மாநில அணிக்குப் பதக்கங்களை வழங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

21 வயதான க.டார்ச்சாயினி, கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை சுக்மா போட்டி ஏற்பாடு செய்ததற்கு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

“இம்முறை பினாங்கு விளையாட்டு வீரர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கூடுதலான தங்கப் பதக்கங்களை வெல்வார்கள்,” என்றார்.

தேசிய விளையாட்டு மன்றம் நடத்தும் கோலாலம்பூர் சுக்மா விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 31 வகையான விளையாட்டுகள் மற்றும் 445 போட்டிகள் நடத்தப்படும்.