பினாங்கு மாநில அரசு வருகின்ற 23 ஜுலை தொடங்கி 31-ஆம் திகதி வரை நடைபெறும் மலேசிய விளையாட்டு(சுக்மா) போட்டியில் தங்கம் பதக்கம் வெற்றிப் பெறும் வெற்றியாளர்களுக்கு ரிம3,000 சன்மானம் என அறிவித்தது.
சரவாக் மாநிலத்தில் நடைபெறும் சுக்மா போட்டியில் பங்கேற்கும் பினாங்கு விளையாட்டுக் குழுவினருக்கு மாநில கொடியை வழங்கி கெளரவித்த முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் இதனை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தனிநபர் பிரிவில் வெற்றியாளர்கள் பெரும் தங்கப் பதக்கத்திற்கு ரிம3,000, வெள்ளி பதக்கம் ரிம2,000 மற்றும் வெங்கலப் பதக்கத்திற்கு ரிம1,000 என வெகுமதி வழங்குவதாகக் கூறினார். அதுமட்டுமின்றி நால்வர் குழு முறையில் வெற்றிப்பெரும் பங்கேற்பாளர்களுக்கு தங்கப் பதக்கம்(ரிம1,000), வெள்ளி பதக்கம்(ரிம700) மற்றும் வெங்கலப் பதக்கம் (ரிம500) என அறிவித்தார் டத்தோ முகமது ரஷிட். போட்டியாளர்கள் சன்மானம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்றும் மாநில அரசு அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய இளைஞர் மற்றும் விளையாட்டு, மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் மாநில போட்டியாளர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். போட்டியாளர்கள் சுக்மா விளையாட்டுப் போட்டியில் அதிகமான தங்கப் பதக்கங்கள் பெற சிறந்த விளையாட்டு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டு பினாங்கு மாநிலத்தை பிரதிநிதிக்கும் 441 பேர்களில் பங்கேற்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரி, பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இடம்பெறுகின்றனர்.
இந்த ஆண்டு பினாங்கு மாநிலம் 30 தங்கப் பதக்கங்கள் பெறும் என்றும் 5-ஆம் நிலையை தக்க வைக்கும் என தனது எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த டத்தோ லீ சோங் வேய், டத்தொ நிக்கல் டேவிட், தம்பு கிருஷ்ணன் ஆகியோர் அனைத்துலக விளையாட்டு அரங்கத்தில் வெற்றிக் கொடி நட்டு சாதனைப் படைத்துள்ளனர். எனவே, பினாங்கு விளையாட்டாளர்கள் என்றும் வல்லமை வாய்ந்தவர்கள் என்பது சித்தரிக்கப்படுகிறது. மலேசியாவைப் பிரதிநித்து ரியோ டி ஜனய்ரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களில் ஐவர் பினாங்கு மாநிலத்தை சார்ந்தவர்கள் என சுட்டிக்காட்டினார் சோங் எங்.
நிகழ்வில் மாநில நிதித் துறை தலைமை அதிகாரி டத்தோ மொக்தார் முகமது, பினாங்கு விளையாட்டுக் கழகத் தலைவர் பெரிடிக் தான் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.