பத்து உபான்– பினாங்கு மாநில அரசு போக்குவரத்து நெரிசலை ஒழிக்கும் பொருட்டு சுங்கை டுவா – மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் இடையிலான இலவசப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தியது.
இந்த இலவசப் பேருந்து சேவை வாயிலாக பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி அவ்வட்டார பொது மக்களும் நன்மை அடைகின்றனர் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கூறினார்.
“மாநில அரசு முதல் முறையாக பல்கலைக்கழக வளாகத்தில் இலவச பேருந்து சேவை வழங்கி பினாங்கு தீவுப் பகுதியில் நெரிசலை குறைக்க வழிவகுத்துள்ளது” என சுங்கை டுவா பகுதி இலவச பேருந்து சேவை அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் பொறியியலாளர் டாக்டர் அப்துல் ரஹ்மான் முகமது மற்றும் ரேபிட் பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி முகமது அஸ்மி அப்துல்லா கலந்து கொண்டனர்.
துணை வேந்தர் எதிர்காலத்தில் சுங்கை டுவாவில் அமைந்திருக்கும் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் நிபோங் திபால் பகுதியில் அமைந்திருக்கும் அறிவியல் பல்கலைக்கழக பொறியியல் புலத்திற்கும் இடையில் நேரடி இலவச பேருந்து சேவை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் உயர்க்கல்வி மாணவர்கள் தீவுப்பகுதி மற்றும் பெருநிலப்பகுதிக்கும் இடையில் போக்குவரத்து பிரச்சனையைக் களைய முடியும் என சட்டமன்ற உறுப்புனர் நம்பிக்கை தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிர்வாகம் வாரநாட்களில் ஒரு நாளை “வாகன பயன்பாடு அற்ற தினமாக” அறிமுகப் படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதன் மூலம் பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு சுற்றுச்சூழலையும் மாசுயடையாமல் பாதுகாக்கலாம் என்று குமரேசன் வழியுறுத்தினார்.
மாநில அரசு இத்திட்டத்தை ஒரு மாதத்திற்கு அமல்படுத்துவதற்கு ரிம120,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
“ Taman Pekaka, Tesco Extra, SJKC Keong Hoe, Taman Jubilee, Taman Lip Sin, Sunshine, Hotel Vistana, Taman Bukit Jambul, Kompleks Bukit Jambul, I- Avenue, Hotel Alora, SMK Sungai Nibong, SJKC Kwang Hwa, SK Sungai Nibong, Masjid Jamek Sungai Nibong, Gold Coast Resort, Bay Garden, Queensbay Mall, Pangsapuri Nibong Indah, Terminal Bas Sungai Nibong, dan SMJK Phor Tay” ஆகிய இடங்களில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும்.