சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி மூடப்படாது – சத்தீஸ்

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு கல்வி இலாகா மூலம் நிபோங் திபால் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாக பொதுமக்களின் கவலைகளைத் தணிக்க கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பினாங்கு கல்வி இலாகா, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு
தென் செபராங் பிறையில் இரண்டு மாடிக் கட்டிடம் கட்டுவதற்கான இப்பள்ளியின் விண்ணப்பத்தை ஆதரிக்கவில்லை என்று கடிதம்
(மார்ச்,22) அனுப்பியதாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் கூறினார்.

இத்திட்டமானது ஆறு வகுப்பறைகள், 12 சிறப்பு அறைகள் மற்றும் மற்ற வசதிகளுடன் ரிம14.511 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது.

“அந்தக் கடிதத்தில் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை மற்றும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி மாணவர்களை அருகாமையில் இருக்கும் மற்ற தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்கலாம் என
இரண்டு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இக்கடிதம் தொடர்பாக, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியை மூடிவிட்டு, அதன் மாணவர்களை அருகில் உள்ள மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு எண்ணம் கொள்வதாக, குறிப்பாக இந்திய சமூகத்தினரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“மாநில அரசு மற்றும் பினாங்கு தமிழ்ப் பள்ளிகள் சிறப்புக்குழு சார்பாக இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள இரண்டாவது காரணத்திற்கு உடன்படவில்லை,” என்று சத்தீஸ் இன்று கொம்தாரில் நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சரின் அலுவலகம் மற்றும் துணைக் கல்வி அமைச்சரை அணுகிய போது, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட இக்கடிதம் பற்றி இரு தரப்பினருக்கும் தெரியாது என்று சத்தீஸ் கூறினார்.

“நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான கல்வி அமைச்சருக்கும் அந்தக் கடிதம் பற்றி எதுவும் தெரியாது என்பதும் தெரிவிக்கப்பட்டது.

“இரண்டு வாரத்திற்கு முன்புதான் அமைச்சர் பள்ளி வாரியத்தை சந்தித்தார், அவர் அப்பள்ளிக்கு உதவ ஒப்புக்கொண்டார்,” என்றார்.

இப்பள்ளி குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளி அல்ல என்றும் சத்தீஸ் விளக்கினார்.

“தற்போது, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி தனியார் நிலத்தில் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், பள்ளிக்காக நிலம் ஒதுக்கப்பட்டு மேலும் இப்புதிய பள்ளியை நிர்மாணிக்க ரிம3.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

“ஆனால் கட்டுமானச் செலவு அதிகரித்ததால், ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. கட்டுமானப் பணிகள் சுமார் 10 முதல் 15% வரை எட்டியுள்ளன, முழு ஒதுக்கீடும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“இந்தத் திட்டத்தைத் தொடர மேலும் நிதி ஒதுக்கீடு கோரி கல்வி அமைச்சரிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.

“இருப்பினும், பள்ளிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்ட இரண்டாவது காரணத்தைப் படித்தபோது, ​​அப்பகுதியில் உள்ள பெற்றோர்களும் இந்திய சமூகமும் அதிர்ச்சியடைந்தனர்,” என்று அவர் கூறினார்.

பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பை நடத்தும்படி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக சத்தீஸ் கூறினார்.

“சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி மூடப்படாது என்று கல்வி அமைச்சர் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் அலுவலகங்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

“தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நாடாளுமன்றத் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கல்வி அமைச்சர், 60 முதல் 70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இப்பள்ளியை மூட அனுமதிக்க மாட்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஊடக சந்திப்பில் பினாங்கு தமிழ்ப் பள்ளிகளின் சிறப்புக் குழுச் செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் அக்குழு உறுப்பினர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், மார்ச்,23 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், புதிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்காக பினாங்கு கல்வித் இலாகக்காவின் முடிவு குறித்து டாக்டர் இராமசாமி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

“போதிய நிதி ஆதாரம் இல்லை என்பதற்காக பள்ளியின் கட்டுமானப் பணியை நிறுத்தக் கூடாது.

“பினாங்குக் கல்வி இலாகா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள பள்ளிகளுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தக் கூடாது, இது அரசாங்கத்தின் பொறுப்பை நிகாகரிப்பது போல் அமைகிறது.

“போதிய நிதி இல்லாததால் நிறுத்தப்பட்ட புதிய சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்தை புதுப்பிக்க பல வழிகள் உள்ளன.

“இப்பிரச்சனைக்கு நிதித் திரட்டும் திட்டத்தின் மூலம் தீர்வுக் காணலாம். இப்பள்ளிக்கான நிலம் ஒதுக்கப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கைவிடுவதில் பினாங்கு அரசாங்கம் உடன்படவில்லை.

“போதிய நிதி ஆதாரங்கள் இல்லாவிட்டால், தேவையான நிதியைத் திரட்டுவதற்கான வழிகளைக் கண்டறிவது அவசியமாகும்,” என்று இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி கூறினார்.