வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அரசியல் முக்கியத்துவத்தையும் நிலைப்பாட்டையும் சீர்குலையச் செய்யும் வல்லமை கொண்டது. ஆகவே, இவ்வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் தலையீடும் பங்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது.’ என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் சிங் வலியுறுத்தினார்.
கடந்த ஜூன் 1 மற்றும் ஜூலை 2-இல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பின் அவ்விடத்தில் வெள்ளப் பிரச்சனை சற்று மோசமான நிலையில் இருப்பதால், அதனைக் கருத்தில் கொண்டு சுங்கை பினாங்கின் இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் மாநகராட்சி வடிகால் திட்டத்தை தீவிரப் படுத்துதல் அவசியமாகிறது. இங்கு ‘மெஸ்ரா ஹர்மொனி’ என்னும் நிகழ்வைத் தொடக்கி வைக்க வந்திருந்த போது மேற்கண்டவாறு கூறினார்.
வெள்ளப்பேரிடர் என்பது நாம் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய ஒன்று. எனவே, அதனை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாது. அதற்காகத்தான் நம் முன்னோர்கள் ‘வெள்ளம் வரும் முன் அணை போடு’ என்றார்கள். ஆகவே, சில முன் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வெள்ளப்பேரிடரைத் தடுக்கவும் அல்லது இப்பேரிடரால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கவும் முடியும். மேலும், முன்னமே இவ்விடத்தில் வெள்ளத்தைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காத முன்னால் ஆளுங்கட்சியான தேசிய முன்னணியின் செயல் வருத்தத்தை அளிப்பதாகவும் கூறினார்.
70 சதவீதம் பூர்த்தியடைந்துவிட்ட இந்த இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் திட்டம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடைந்துவிடும். மத்திய அரசாங்கம் இத்திட்டத்திற்காக 9-ஆவது மலேசியத்திட்டத்தின் கீழ் வழங்கிய ஒதுக்கீட்டை ஒத்திவைத்ததால்தான் இத்திட்டம் தாமதமாகியுள்ளது. எனினும் இப்பிரச்சனை 10-ஆவது மலேசியத்திட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலை அடுத்த மலேசியத்திட்டம் வரை நீடிக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாநில அரசின் பொருளாதார வளம் வரம்புக்குட்பட்டு இருப்பதால் வெள்ளப் பிரச்சனையை உடனே கையாளும் நோக்கில் இத்திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய மத்திய அரசு பொருளுதவி வழங்கி ஆதரிக்க வேண்டும் என்றார் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங். சுமார் ரி.ம 150 கோடி பொருட்செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் சுங்கை பினாங் ஆற்றை அகலப்படுத்தல் மற்றும் ஆழப்படுத்தல் நடவடிக்கைகளும் வண்டல் ‘silt’ பொறி நிறுவுதலும் மேற்கொள்ளப்படும்.