பாகான் டாலாம் – அண்மையக் காலமாக பிறை ஆற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியை சுங்கை பிறை இயற்கை பாதுகாப்பு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அரசு சாரா தனியார் இயக்கமாக செயல்படும் இச்சங்கத்தின் நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு படகு வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு வழங்கினார்.
சுங்கை பிறை ஆற்றைச் சுற்றிப்பார்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரியுடன் நிருபர்களும் இச்சங்கத்திற்குச் சொந்தமான படகில் பயணித்தனர். சுங்கை பிறை ஆறு வெள்ளை நிற நாரைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாகத் திகழ்வதைக் கண் கூடாக காண முடிந்தது.
“இச்சங்ம் இந்த படகைப் பயன்படுத்தி முன்னெடுப்புத் திட்டமாக சுங்கை பிறை ஆற்றின் தூய்மையை மேம்படுத்தல் மற்றும் திட்டமிட்டப்படி பள்ளி மாணவர்கள் படகில் சுற்றுலா மேற்கொள்ள வழி நடத்த வேண்டும்,” என தாமான் கிம்சார் பொழுதுபோக்கு பூங்காவில் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
வருங்காலங்களில் இச்சங்கத்தின் சேவைக்கு நம்பிக்கை கூட்டணி அரசு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் இணை ஆதரவு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இன்றுவரை இப்பகுதி இந்தோனேசியா மற்றும் மியான்மார் நாட்டைச் சேர்ந்த அனைத்துலக வர்த்தக கப்பல்களுக்கு சிறிய துறைமுகமாக விளங்குவதை அந்த ஆற்றை சுற்றி நின்று கொண்டிருக்கும் கப்பல்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த சுங்கை பிறையின் கடலோரம் மீனவர்களின் மீன் பிடிக்கும் தொழிலுக்கு முதன்மை வகித்தாலும் கப்பல் மற்றும் பயணப்படகு பழுதுப்பார்க்கும் பட்டறையாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசு சாரா இயக்கத்திற்கு படகு வாங்க நிதியுதவி வழங்குவதன் மூலம் இச்சங்க உறுப்பினர்கள் இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும் அதேவேளையில் வருமானத்தையும் ஈட்ட முடியும் என கூறினார்.
“இந்த படகு சுங்கை பிறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் .படகு வாங்குவதற்கு ரிம17,000ஐ நிதியுதவியாக வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுக்கு நன்றிக் கூறுவதாக,” சுங்கை பிறை இயற்கை பாதுகாப்பு சங்கத் துணை தலைவர் லிங்கேஸ்வரன் கூறினார்.
மேலும், இச்சங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் பேராசிரியர் ப.இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.