சுதந்திர மாதக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைவரும் ஒன்றிணைந்து தேசப் பக்தியை வெளிப்படுத்துவோம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அளவிலான 2023-ஆண்டுக்கான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசிய கொடியை பறக்கவிடுவோம் எனும் பிரச்சாரம் சிறப்பாக தொடக்க விழாக் கண்டது.

இந்த ஆண்டின் தேசிய மாத பிரச்சாரத்துடன் இணைந்து நாட்டின் மீதான தங்கள் நேசத்தைக் காட்ட வேண்டும் என பொது மக்களுக்கு பராமரிப்பு அரசாங்கத்தின் மாநில முதலமைச்சருமான மேதகு சாவ் கொன் இயோவ் அறிவுறுத்தினார்.

மலேசியா மடானி: நம்பிக்கையை நிறைவேற்ற ஒற்றுமையை நிலைநாட்டுதல் என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, தேசிய மாதக் கொண்டாட்டத்தை மேலும் பெருகூட்ட இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் ஈடுபாடும் மிகவும் முக்கியமானது, என்று அவர் கூறினார்.

“தேசிய மாதம் முழுவதும் அட்டவணையிடப்பட்ட நிகழ்ச்சிகளும் சாராம்சமும் மக்களிடையே தேசபக்தியின் உணர்வை எழுப்ப முக்கிய பங்கு வகிக்கிறது.

“மாநில அளவிலான, இந்த தேசிய மாதம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாள்காட்டியில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு மாநில அரசு முழுமையாக ஆதரவளிக்கும்.

“எனவே, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், நாட்டின் மீதான நமது தேசபக்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவோம்,” என இந்த நிகழ்ச்சியை ஜாலான் பாடாங் கோத்தா லாமா (எஸ்பிளனேட்) அருகாமையில் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லா சூ கியாங்; முன்னாள் இரண்டாம் துணை முதலமைச்சர், பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி; மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சாயுத்தி பாக்கார்; முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; பினாங்கு காவல்துறைத் தலைவர், டத்தோ காவ் கோக் சின் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு தேசிய மாதக் கொண்டாட்டத்தின் கருப்பொருளானது மாநிலத்தையும் நாட்டையும் மேம்படுத்த அனைத்துத் தரப்பினரின் கடமை உணர்ச்சி, உறுதிபாடு, அர்ப்பணிப்பு ஆகியவை ஊக்குவிக்கத் தூண்டுவதாக, கொன் இயோவ் கூறினார்.

இந்த சுதந்திர மாதம் மற்றும் தேசியக் கொடியை பறக்கவிடுவோம் எனும் கொண்டாட்டம் மலேசியா நாட்டின் மீது கொண்ட மரியாதை, சுபிட்சம் மற்றும் அமைதிக்கான தேசபற்றை பதிவுச் செய்யும் மடானி அரசாங்கத்தின் முயற்சியாகத் திகழ்கிறது
ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் என செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் சாவ் தெரிவித்தார்.

“மலேசிய மடானி கருப்பொருளுக்கு இணங்க, இந்த ஆண்டின் தேசிய மாத பிரச்சாரம் இந்த நாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கத் துணைபுரியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“நாங்கள் பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நிலைத்தன்மை அற்ற சூழலில் இருந்து தற்போது மீட்சியை நோக்கி செயல்படுகிறோம்.

“எனவே, தேசிய வளர்ச்சிக்காகவும், மக்களின் நல்வாழ்வு மற்றும் நலனுக்காகவும், மக்களின் நம்பிக்கையை உண்மையிலேயே மீட்டெடுக்கும் வகையில் சுதந்திர மாதம், சுதந்திர தினம் மற்றும் மலேசிய தினம் ஆகியவை திகழ்கிறது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் முதலமைச்சர், தேசிய மாத பிரச்சாரத்தின் தொடக்கத்தின் அடையாளமாக 21 மாநிலத் துறைகள், 19 மத்திய துறைகள், 11 மாநில முகவர் நிறுவனங்கள் மற்றும் 10 மத்திய முகமைகளுக்கு ஜாலூர் ஜெமிலாங் கொடிகளை வழங்கினார்.

மேலும், பொது மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 40 வாகனங்களின் அணிவகுப்பையும் தொடக்கி வைத்தார்.