சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு திடல் அமைக்கத் திட்டம் – குமரேசன்

Admin
சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி போட்டி விளையாட்டில் வெற்றிப்பெற்ற மாணவர்களுடன் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன்.

பத்து உபான் தொகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி அண்மையில் 44-வது பள்ளியின் ஆண்டு விளையாட்டு போட்டியை புக்கிட் குளுகோர் தேசியப்பள்ளியில் நடத்தியது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.குமரேசன் கலந்து சிறப்பித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளி ஆண்டு விளையாட்டு போட்டியை நடத்த இடப்பிரச்சனையை எதிர்நோக்குகின்றது. சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு என ஒரு திடல் இல்லாமையால் அப்பள்ளி மாணவர்கள் திடல்தட விளையாட்டு போட்டிகளில் ஈடுப்பட ஒரு தடைக்கல்லாக அமைகிறது என தமதுரையில் குறிப்பிட்டார் சட்டமன்ற உறுப்பினர். எனவே, இப்பிரச்சனையை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை அமைப்பின் ஒத்துழைப்புடன் தீர்வுக்காண வியூகங்கள் அமைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். விளையாட்டு துறையில் இலைமறை காயாக இருக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிகொணரவும் அவர்களிடையே விளையாட்டில் ஆர்வத்தை மேலோங்க செய்ய இப்பள்ளிக்கு திடல் முக்கியமாக கருதப்படுகிறது.

சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி போட்டி விளையாட்டில் வெற்றிப்பெற்ற மாணவர்களுடன் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன்.

உலகம் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பினாங்கு மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பிரசித்தி பெற்ற பினாங்கு தமிழ்ப்பள்ளியில் இருந்தும் விளையாட்டு வீரர்களை உருவாக்க எண்ணம் கொண்டுள்ளார். எனவே, “இன்னும் ஐந்தாண்டுகளில் என் தொகுதியில் அமைந்திருக்கும் இப்பள்ளிக்கு திடல் அமைப்பதை என் தலையாய கடமையாக கருதுகிறேன்”, என சூளுரைத்தார். மாநில அரசு மற்றும் புதிய மத்திய நம்பிக்கை கூட்டணி அரசின் துணையுடன் இதனை மெய்ப்பிக்க அயராது பாடுப்படவிருப்பதாக குறிப்பிட்டார்.