புக்கிட் குளுகோர் – மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் உள்ள பழமையான தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு ரிம100,000 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அப்பள்ளியின் புதிய நான்கு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அதன் கட்டுமானத் திட்டத்திற்கு உதவும் நோக்கத்தில் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“கணினி மற்றும் அறிவியல் ஆய்வகம், கலைக் கல்வி அறை மற்றும் கூடுதல் வகுப்பறைகள் என தேவையான உள்கட்டமைப்புகளுடன் இப்புதிய கட்டிடம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
“இக்கட்டுமானத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவினம் ரிம2.5 மில்லியன் ஆகும்.
“மேலும், மாநில அரசின் இந்த நன்கொடை இக்கட்டுமானத் திட்டத்திற்கு உதவும் என்று நம்புகிறேன்.
“இன்று அறிவிக்கப்பட்ட நன்கொடையானது, இப்பள்ளி மற்றும் மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் சிறந்த பொது வசதியுடன் இருப்பதை உறுதி செய்கிறது. மாநில அரசு ஒருபோதும் பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களைப் புறக்கணிப்பதில்லை என்பதைச் சித்தரிக்கின்றது.
“அதே நேரத்தில், புதிய நான்கு மாடிக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானத் திட்டத்தைச் செயல்படுத்த சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு இன்னும் பல அரசு சாரா நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் நல்லுள்ளங்கள் உதவ முன்வருவார்கள் என்று நம்புகிறேன்,” என்று இன்று பாயான் பாருவில் உள்ள சன்ஷைன் அரங்கத்தில் இப்பள்ளியின் 70வது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிதித் திரட்டும் விருந்தோம்பலில் சாவ் இவ்வாறு கூறினார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை கு.மகேஸ்வரி அவர்களிடம் ரிம100,000 நிதிக்கான மாதிரி காசோலையை சாவ் எடுத்து வழங்கினார்.
மேலும், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி சின், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் மற்றும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் பா.வேணுகோபால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு அரசாங்கத்திற்கு தனது மிகுந்த நன்றியையும் பாராட்டுகளையும் பள்ளித் தலைமையாசிரியை மகேஸ்வரி
தெரிவித்தார்.
“2014 இல் புக்கிட் கம்பீர் பகுதிக்கு இடமாற்றம் செல்வதற்கு முன்னதாக, 70 ஆண்டுகளாக இப்பள்ளி குளுகோரில் இயங்கி வந்தது என்பதை அனைவரும் அறிவோம்.
“குளுகோரில் உள்ள அதன் அசல் பள்ளி ஒரு கோவிலில் நாடகக் குழு நடத்தும் ஒரு மண்டபமாக இருந்தது.
“இப்போது, புக்கிட் கம்பீரில் உள்ள சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் தற்போதைய கட்டிடத்தில் ஒன்பது வகுப்பறைகள், ஒரு கணினி மற்றும் அறிவியல் ஆய்வகம் மற்றும் ஒரு நூலகம் உள்ளது.
“ஆனால், புக்கிட் கம்பீரில் உள்ள புதிய இடத்திற்குச் சென்றதும், மாணவர்கள் எண்ணிக்கை, 2015 ஆண்டு 208 மாணவர்களில் இருந்து கூடுதல் அதிகரிப்பைக் எட்டியுள்ளது. தற்போது இப்பள்ளியில் இந்த ஆண்டு மொத்தம் 340 மாணவர்களைப் பதிவு செய்துள்ளனர்.
“இதுபோன்ற சூழ்நிலையில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், எதிர்காலத்தில் அதிக மாணவர்கள் படிக்கவும், சிறந்த கற்றல் கற்பித்தல் சூழலை உறுதி செய்யவும், இப்பள்ளிக்குப் புதிய கட்டிடம் தேவைப்படுகிறது,” என்றார்.
இந்தத் திட்டத்தில் பள்ளிக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நல்லுள்ளங்கள் முன் வருவர் என்றும் மகேஸ்வரி நம்பிக்கை தெரிவித்தார்.
“இப்பள்ளியின் கட்டுமானத் திட்டத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பொதுமக்கள், Tabung Bangunan SJK (T) Subramaniya Barathee என்ற பெயரில் மலையன் வங்கிக் கணக்கு எண் 507152606576 க்கு நிதி பரிமாற்றம் செய்யலாம் அல்லது மேல் விபரங்களுக்கு பள்ளி நிர்வாகத்தை 012 – 6512 480 / 013-3396 462என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்”, என தலைமையாசிரியை மகேஸ்வரி தெரிவித்தார்.