பினாங்குச் சுற்றுலாத் துறையை மேம்படுத்த மக்கள் கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களைக் கையாண்டு வருகிறது. அவ்வகையில், ஐந்தாம் முறையாக நடைபெற்ற பசிபிக் ஆசியாவின் சுற்றுலா ஊக்குவிப்பு இயக்கத்தின் (Tourism Promotion Organisation) கருத்துக்களத்தைப் பினாங்கு மாநில ஜார்ஜ் டவுன் நகரம் பெருமையோடு ஏற்று நடத்தியது. இக்கருத்துக்களம் கடந்த செப்டம்பர் 17-20 வரை பத்து ஃபிரிங்கி, பே வியு தங்கும் விடுதியில் நடைபெற்றது.
இவ்வியக்கத்தின் பேராளர்கள் பினாங்குச் சாலையில் அமையப்பெற்றிருக்கும் நட்புப் பூங்காவிற்கு செப்டம்பர் 19-ஆம் திகதி வருகை மேற்கொண்டனர். அப்பூங்கா சுற்றுலா ஊக்குவிப்பு இயக்கத்தின் நட்புப் பூங்காவாகத் திகழச் செய்ய அங்கு அவ்வியக்கத்தின் TPO என்னும் சுருக்கப் பெயரைக் கொண்ட உலோகத்தால் ஆன சிற்ப உருளை அமைக்கப்பட்டிருந்தது. அதனை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
சுற்றுலா ஊக்குவிப்புத் துறையின் பேராளர்கள் பினாங்கின் சின்னமாகத் திகழும் ரிக்சாவில் (trishaw) ஏறி ஜார்ஜ் டவுன் பாரம்பரிய பாதையை வலம் வந்தனர். மேலும், பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் உட்பட பேராளர்கள் யாவரும் நட்புப் பூங்காவில் நினைவுச் சின்னமாகத் தங்கள் பெயர் பொறிக்கப்பட்டிருந்த தளங்களில் மரங்களை நட்டு மகிழ்ந்தனர். பின், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் முன்னிலையில் உலகப் பாரம்பரியமிக்க தளத்தில் பசுமையாக்க முயற்சிகளின் பிரகடனம் நடைபெற்றது.
அதன் பின், பேராளர்கள் அனைவரும் பினாங்கு மேற்சாலைக்குச் சென்றனர். அங்கு கண்களைக் கவரும் பிரத்தியேக நடனம் ஒன்று செகி கல்லூரி மாணவர்களால் வழங்கப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் பள்ளி இசைக்குழு மாணவர்களின் படைப்பும் இடம்பெற்றது. அதுமட்டுமன்றி கண்காட்சி, பாரம்பரிய விளையாட்டு, பாரம்பரிய சமையல், கைவினை, தற்காப்புக் கலை யாவும் படைத்துக் காண்பிக்கப்பட்டது.
சுமார் 45 பேராளர்கள் கொண்ட இந்த ஐந்தாம் கருத்துக்களம் பினாங்கு நகரில் நடைபெற்றது பலருக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாகக் கூறினர். மலேசியாவின் மிகச் சிறந்த மாநிலங்களில் ஒன்றான பினாங்கு பாநிலம் பசுமையை ஆதரிக்கும் தூய்மையான நகரமாகத் திகழ்கிறது என்று இந்தோனேசியா, சுராபாயாவைச் சேர்ந்த பேராளர் இபு திரி ரிஷ்மாரினி கூறினார். தூய்மையான கடற்கரையைக் கொண்ட பினாங்கு மாநில ஜார்ஜ் டவுன் நகரம் சுராபாயா நகரத்தைப் போல் இருப்பதால் அதனைச் சுராபாயாவின் சகோதரத்துவ நகரமாகக் கொள்ள திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாககவும் கூறினார்.
தொடர்ந்து, சபா, கோத்தா கினபாலுவைச் சேர்ந்த டத்தோ யோ பூன் ஹாய் பினாங்கு நகரத்தின் போக்குவரத்து நெரிசலாக இருப்பதாகக் கருத்துரைத்தார். ஆனால், ரிக்சாவில் பயணம் செய்தது தமக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது என்றார். மேலும், பினாங்கில் தமக்குப் பிடித்த இடமாகப் பினாங்கு இளையோர் பூங்காவைக் கூறினார். மலேசியாவிலேயே மிகச் சிறந்த பூங்காவாகத் திகழும் இப்பூங்கா பசுமை நிறைந்த அழகிய பூங்கா என வர்ணித்தார். அதோடும் தமக்குப் பினாங்கின் புகழ்பெற்ற உணவான சார் கொய் தியாவ் மிகவும் பிடித்துள்ளது எனவும் கூறினார்.