புக்கிட் தம்புன் – அண்மையில் புக்கிட் தம்புன் மாநில சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் அய்க் மற்றும் புக்கிட் தம்புன் காற்பந்து சங்கத்தின் முயற்சியில் இங்குள்ள சூரியா 1 அடுக்குமாடி குடியிருப்பு உணவு வளாகத்திற்கு புத்துயிர் அளிக்கவும்; வணிகர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழி வகுத்துள்ளது.
இந்த வளாகம் மொத்தம் 33 உணவுக் கடைகளைக் கொண்டுள்ளன.
அப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள், அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மற்றும் பத்து காவான், பண்டார் காசியா நகரத்தைச் சுற்றியுள்ள தொழில்துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இந்த வளாகத்தை திறந்து வைத்தப் பின்னர் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வர் தனது தொடக்க உரையில் இவ்வாறு கூறினார்.
“பொது வசதிகளை முறையாகப் பராமரிக்கத் தவறுவதனால் சம்பந்தப்பட்ட பொது வீடமைப்புப் பகுதிகள் பொழிவிழந்து அங்கு குடியிருப்பாளர்கள் தொடர்ந்து குடியிருக்க முடியாத சூழல் நிலவுகிறது.
“இம்மாதிரியான வளாகங்கள் மீண்டும் புத்துயிர் பெற புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் சூன் அய்க் மற்றும் சில தரப்பினரின் முயற்சியை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும்,” என நூருல் இசா விளக்கினார்.
முன்னதாக சூன் அய்க், பெர்மாத்தாவ் பாவ் சட்டமன்ற உறுப்பினர் நூருல் இசா மற்றும் செபராங் பிறை மாநகர் கழக இரண்டு கவுன்சில் உறுப்பினர்களான அன்வார் யூசோஃப் மற்றும் ஃபஹ்மி ஜைனோல் ஆகியோருக்கு இவ்வளாகத்தின் திறப்பு விழாவை வெற்றிக்கரமாக நடத்த துணைபுரிந்ததற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், உணவு வளாகத்தில் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்த மற்றும் புத்துயிர் அளிக்கும் பணிகளை மேற்கொண்டதற்கு பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) மற்றும் புக்கிட் தம்புன் காற்பந்து சங்கத்திற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.