செபராங் ஜெயா பொது நீச்சல் குளத்தை மேம்படுத்த இலக்கு

 

செபராங் ஜெயா – அண்மையில் மூடப்பட்ட செபராங் ஜெயா பொது நீச்சல் குள வளாகம் மீண்டும் சிறப்பாக செயல்படும் வகையில் மேம்பாடுக் காணவுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ கூற்றுப்படி, இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் குறிப்பாக நீச்சல் குளத்தில் உள்ள நீரின் தரம் உட்பட சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

“நீச்சல் குள பொது வசதிகளில் நிறைய சேதம் இருப்பதால், பயனர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. எனவே, பினாங்கு அரங்கம் மற்றும் பொழுதுபோக்கு தல கார்ப்பரேஷன் (PSDKLPP) இவ்விடத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் மற்றும் நிர்வகிப்பதற்கான ‘முன்மொழிவுக்கான கோரிக்கை’ (RFP) கடந்த ஆகஸ்ட்,27 முதல் சமர்ப்பிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

“வடிக்கால் அமைப்பு மற்றும் மழைநீர் அமைப்பு, கழிப்பறை, பம்ப் அறை, சுற்றளவுப் பகுதி, சிற்றுண்டிச்சாலை மற்றும் புதிய நீர் வடிகால் அமைப்பை நிறுவுதல் ஆகியவை இந்த மேம்பாட்டுப் பணிகளில் அடங்கும்.

“மின்சார அமைப்பின் ஒரு பகுதியை மேம்படுத்துதல், இரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவுதல், அறிவிப்பு பலகை நிறுவுதல், கூரையை மேம்படுத்துதல் மற்றும் மிக முக்கியமாக புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் குளத்தில் நீர் பராமரிப்புக்கான தானியங்கி இரசாயன அளவீட்டு முறையை நிறுவுதல் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும்,” என்று சூன் லிப் சீ செபராங் ஜெயா நீச்சல் குள வளாகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும் கருத்து தெரிவித்த சூன், நீச்சல் குளத்தில் உள்ள pH வாசிப்பு வீதம் இதற்கு முன்னர் அடிக்கடி நிர்ணயிக்கப்பட்ட அளவை குறிக்கும். எனவே, சுத்திகரிப்பு மற்றும் இரசாயன அளவீட்டு முறையை உள்ளடக்கிய மேம்படுத்தல் வேலைகள் அவசியம் மேற்கொள்ள வேண்டும், என்று விவரித்தார்.

இதனிடையே, ரிம3 மில்லியனுக்கும் மேலான மதிப்பீட்டில் இந்த மேம்பாட்டுப் பணி வருகின்ற எட்டு மாதங்களில் நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, PSDKLPP மற்றும் D’Swim அகாடமி தனியார் நிறுவனம் இடையில் செபராங் ஜெயா பொது நீச்சல் வளாகத்தை மேம்படுத்த, நிர்வகிக்க மற்றும் பராமரிக்க கடந்த 2022 மார்ச்,22 அன்று 18 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பாகான் ஜெர்மால் மாநில சட்டமன்ற உறுப்பினருமான லிப் சீ, செபராங் ஜெயா பொது நீச்சல் குளம் நுழைவுக் கட்டணம் விலை முன்பு போலவே நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்தார்.

“பெரியவர்களுக்கு ரிம3.00, 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் (ரிம 1.50), குடிமக்கள் அல்லாதவர்கள் (ரிம 10.00) மற்றும் குடியுரிமை அற்ற குழந்தைகளுக்கு(ரிம5.00) என முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் இன்னும் அமலில் உள்ளது.

“ஊனமுற்றோர் (OKU), மூத்தக் குடிமக்கள், செபராங் பிறை மாநகர் கழக (MBSP) ஊழியர்கள், Toray குழும ஊழியர்கள், PSDKLPP ஊழியர்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசம்,” என்று அவர் கூறினார்.