ஜனவரி 13 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ 2.0) அமல்படுத்தியதிலிருந்து, பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் செய்தித்தாள் விற்பனையாளர்களுக்கு, அவர்களின் வணிகங்கள் கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்திற்கு முன்பே போராட்டமாக அமைந்துள்ளது.
முத்துச்செய்திகள் நாளிதழ் குழுவினரின் ஒரு நேர்காணலின் போது, பட்டர்வொர்த் வட்டாரத்தில் இரண்டு செய்தித்தாள் விற்பனையாளர்கள் விற்பனை சரிவுக் குறித்தும் அதனால் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
அண்மைய காலமாக செய்தித்தாள்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதே இந்த விற்பனையின் வீழ்ச்சிக்கு முதன்மை காரணம் என மொஹமட் சலீம் கான் மொஹமட் அலி,45 கூறினார்.
” தற்காலத்தில் வாசகர்கள் இணையத்தளம் வாயிலாக செய்திகளைப் படிக்கத் தேர்வு செய்துள்ளனர். ஏனெனில், இது தகவல்களைப் பெறுவதற்கான விரைவான வழி மற்றும் பணம் சேமிக்கப்படுகிறது.
“முன்னதாக, நாங்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான செய்தித்தாள்களை விற்பனை செய்தோம், ஆனால் இப்போது அது வெகுவாகக் குறைந்துள்ளது.
“செய்தித்தாள்களை விற்க முடியாமலும், அதேவேளையில் விற்கப்படாத அந்த நகல்களின் விலையையும் நாங்கள் ஏற்க வேண்டும்.
“உதாரணமாக, நாங்கள் விநியோகஸ்தரிடமிருந்து 50 நாளிதழ்கள் எடுத்தால், அவை விற்கப்படாவிட்டால் 10 சதவிகிதம் மட்டுமே திருப்பித் தர முடியும்,” என்று மொஹமட் சலீம் கூறினார்.
இத்தொழிலில் மூன்றாம் தலைமுறையான சலீம், செய்தித்தாள் வியாபார வீழ்ச்சியால் இப்போது மளிகைப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுப்படுவதாகக் கூறினார்.
“எங்கள் கடை 70 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது, இது என் குடும்ப தொழிலாகும். என் தந்தை மற்றும் தாத்தாவின் காலத்தில், செய்தித்தாள்களை விற்பது எங்களின் பிரதான வணிகமாக இருந்தது.
“முன்பு, பட்டர்வொர்த் வட்டார அருகிலுள்ள அரசாங்க அலுவலகங்களுக்கு செய்தித்தாள்களை விநியோகிக்கும் பிரதானமாக விநியோகிப்பாளராக செயல்பட்டோம். ஆனால், நான் இப்போது அதனை தொடர்ந்து செய்யவில்லை,” என்று ஜாலான் தெலாகா ஆயிர் என்ற இடத்தில் அமைந்துள்ள அவரின் கடையில் மொஹமட் சலீம் கூறினார்.
இது தவிர, கோவிட்-19 தாக்கத்தால் சிறுவியாபாரிகளுக்கான பொருளாதார ஊக்கப் தொகையின் கீழ் மாநில அரசு வழங்கிய நிதி உதவியை தான் கடந்தாண்டு பெற்றுள்ளதாகவும் சலீம் பகிர்ந்து கொண்டார்.
“என்னைப் போன்ற விற்பனையாளர்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் இந்த ஆண்டு இதேபோன்ற உதவியை அரசு அறிவிக்கும் என்று நம்புகிறேன்” என்று மொஹமட் சலீம் மேலும் கூறினார்.
இதேபோல் 59 வயதான செய்தித்தாள் விற்பனையாளர் பொ.ஆறுமுகமும் அவரைப் போன்ற செய்தித்தாள் விற்பனையாளர்களின் அவலநிலையை மாநில அரசு கவணிக்க வேண்டும், என்று கூறினார்.
“வியாபாரத்தை வழிநடத்த
பொருட்கள் வாங்குவதற்கே எங்களுக்கு வருமான ஆதாரங்கள் தேவைப்படுவதால், குறைந்த வருமானத்துடன் வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினமாகிறது, ” என்று ஆறுமுகம் கூறினார்.
குடியிருப்புப் பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் செய்தித்தாள்கள் விநியோகிப்பதாகவும் கூறினார்.
“நான் வழக்கமாக பாகான் ஆஜாம் மற்றும் தெலொக் ஆயிர் தாவார் சுற்று வட்டாரங்களில் 600 வாடிக்கையாளர்களுக்கு செய்தித்தாள்களை விநியோகிப்பேன். ஆனால், இப்போது கோவிட்-19 தாக்கத்திற்குப் பின்னர் அது 400-ஆக குறைந்துள்ளது.
“நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காரணமாக எனது கடையில் விற்பனையும் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைந்துவிட்டது, ” என்று ஆறுமுகம் கூறினார்.
பலர் செய்தி மற்றும் நாட்டு நடப்பு அறிய இணையம் வழி செய்திகள் படிக்கத் தேர்வுச் செய்தாலும், இன்னும் செய்தித்தாள் மூலம் படிக்கும் வாசகர்களும் இன்னும் உள்ளனர்.
தமிழவேள் கோ சரங்கபானி சங்கத் தலைவர் ஜே.எம்.புருஷோத்தமன்,70 தினமும் அச்சிட்ட செய்தித்தாளைப் படிப்பதை கட்டாயமாக கொண்டுள்ளார்.
“தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு மேல் கொண்ட அக்கறையால் எனது மொழியைப் பாதுகாப்பதில் பங்களிப்பு செய்வதற்காக நான் தினமும் தமிழ் நாளிதழை வாங்குகிறேன்.
“நான் ஆங்கில நாளிதழ்களையும் வாங்குகிறேன். இருப்பினும் நாட்டில் இந்திய சமூகத்தைப் பற்றிய செய்திகள் தமிழ் செய்தித்தாள்கள் மூலமாகவே அதிகமாக அறிய முடிகிறது.
“எனவே, தமிழ் மொழி மற்றும் சமூகத்தின் நல்வாழ்வுக்காக இணைய தளத்தைப் பொருட்படுத்தாமல் செய்தித்தாள்களை வாங்கி ஆதரவளிப்பேன்,” என்று பினாங்கு டஃப் கிளப்பில் கால்நடை உதவியாளராக இருக்கும் புருஷோத்தமன் கூறினார்.