ஜாலான் ஜெத்தி லாமா லிட்டல் இந்தியாவாக உருவாக்கப்படும் – சத்தீஸ்

Admin

பட்டர்வொர்த்- பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் பட்டர்வொர்த் பொங்கல் கொண்டாட்டம், ஜாலான் ஜெத்தி லாமா பகுதியில் மிக விமரிசையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வினை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கலந்து கொண்டு அவர்தம் துணைவியாருடன் பொங்கல் வைத்து இந்நிகழ்வினை இனிதே தொடங்கி வைத்தார்.

மாலை 4 மணி அளவில் தொடங்கப்பட்ட இக்கொண்டாட்டத்தில் இந்தியர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கோலாட்டம், புலியாட்டம், பொய்கால் குதிரை, மயிலாட்டம் மற்றும் இன்னும் பல நிகழ்வுகள் வருகையாளர்களை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், பொங்கல் போட்டி, கோலம் போடும் போட்டி, இசை நாற்காலி போன்ற கேளிக்கை நிகழ்வுகளும் சிறுவர் முதல் பெரியவர் வரை பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்வுகளிலும் பட்டர்வொர்த் வட்டாரத்தில் வாழும் மூவின மக்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

இப்பொங்கல் கொண்டாட்டம் தாம் சட்டமன்ற உறுப்பினராக பணியில் இருக்கும் வரை இங்கு நடத்தவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். பட்டர்வொர்த் வட்டாரத்தில் இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக லிட்டல் இந்தியா அமைக்க முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து, அடுத்த மாதம் ‘வயலின்’ இசைக்கருவி வகுப்பு நடைபெறவுள்ளதை தமதுரையில் குறிப்பிட்டார் . இதற்கு இந்திய மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், வருகின்ற ஜூன் மாதத்தில் இந்தியர்களின் கலைகளான கோலாட்டம், சிலம்பம் போன்ற வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே, அவ்வட்டார மாணவர்கள் இத்திட்டங்களில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கப்படுகின்றனர்.