ஜாலான் பி.ரம்லீ வெள்ள நிவாரணத் திட்டம் கூடிய விரைவில் நிறைவுப்பெறும்

Admin

ஜெலுத்தோங் – ஜாலான் பி.ரம்லீயில் உள்ள வெள்ள நிவாரணத் திட்டம், அடுத்த மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், ரிம413,550 மதிப்பிலான இத்திட்டத்தின் இறுதிக் கட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு பினாங்கு மாநகர் கழகத்தால் (எம்.பி.பி.பி) செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

“இந்த இறுதிக் கட்டத் திட்டத்தில் சாலை மட்டத்தை உயர்த்தும் பணி, ஜாலான் பி. ரம்லீ முதல் ஜாலான் திராங்கானு வரை 0.6 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை வடிக்கால்களை அகலப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

“இந்த திட்டம் ஜாலான் பி.ரம்லீயில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக ஜாலான் திராங்கானு மற்றும் பி.ரம்லீ வளைவு பாதையில் உள்ள வளாகத்தில் வசிப்பவர்களுக்குப் பயனளிக்கும்,” என்று ஜெக்டிப் செய்தியாளர்களிடம் கூறினார்.

2018 ஆம் ஆண்டு முதல் மொத்தம் ரிம6.12 மில்லியன் செலவில் ஜாலான் பி.ரம்லீயில் ஏழு திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தில் ஜாலான் இஸ்மாயில் சே மாட் (ரிம756,440), ஜாலான் மெக்லோம் (ரிம290,874 இல் ஒரு பம்ப் ஹவுஸ் கட்டுவது உட்பட), ஜாலான் உத்தாமா மற்றும் ஜாலான் டத்தோ கெராமாட் (ரிம408,490) ஆகியவற்றின் வடிக்கால் அமைப்பு மேம்படுத்தப்பட்டன.

2019 ஆம் ஆண்டில், லோரோங் சிங்கோராவில் வடிக்கால் அமைப்பை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன, இது 2020-இல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) அமலாக்கத்திற்கு முன்பு ரிம415,555 நிதிச் செலவில் செயல்படுத்தப்பட்டது.

ஜாலான் பி. ரம்லீயில் சாலை மட்டத்தை உயர்த்தும் பணிகள் மற்றும் சுங்கை ஜெலுத்தோங் இரண்டு பம்ப் ஹவுஸ்கள் கட்டுதல்(ரிம3.64 மில்லியன்) போன்ற மேம்படுத்தும் திட்டம் பின்னர் தொடர்ந்தது.

இதற்கிடையில், லோட் 3423 ஜாலான் பி. ரம்லீயிலிருந்து சுங்கை ஜெலுத்தோங்கிற்குள் நுழையும் மழைநீர் ஓட்ட விகிதத்தை அதிகரிக்க 2021 ஆம் ஆண்டில் ஒரு அகழி கட்டப்பட்டது, இதற்கு ரிம216,288 செலவானது.

“பருவநிலை நெருக்கடி காரணமாக, நாம் தயாராக இருக்க வேண்டும். பொதுவாகவே, வெள்ளம் சுங்கை பினாங்கில் இருந்து தொடங்கும் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஜாலான் பி. ரம்லீ ஆகும்,” என்று ஜெக்டிப் கூறினார்.

இதற்கிடையில், எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ இராஜேந்திரன், இந்த முயற்சியானது அப்பகுதியில் வெள்ளத்தின் தாக்கங்களைக் குறைக்கும், என்றார்.

“ஆனால், நீடித்த மழையின் போது, ​​வெள்ளம் ஏற்படலாம், ஆனால் முன்பு போல் தீவிரமாக இருக்காது.

“இந்தத் திட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பைக் குறைக்க சாலையின் குறுக்கே மற்றொரு வரிசை பெட்டி கல்வெட்டுகளையும் கட்டுவோம்,” என்று இராஜேந்திரன் கூறினார்.

மேலும், இச்செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் பினாங்கு மாநில செயலக அலுவலக உள்ளாட்சிப் பிரிவின் தலைவர், நூர் ஆயிஷா எம்.டி நோரோடின் கலந்து கொண்டனர்.